Published : 16 Aug 2023 05:40 AM
Last Updated : 16 Aug 2023 05:40 AM

“இப்படியே போனால் அவ்வளவுதான்.. பாலிவுட் சினிமா மாறவேண்டும்” - ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி அறிவுரை

மும்பை: பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. புகழ்பெற்ற ’சில்ரன் ஆஃப் ஹெவன்’, ’தி கலர் ஆஃப் பாரடைஸ்’, ‘முகம்மது: தி மெசஞ்சர் ஆஃப் காட்’ உட்பட சில படங்களை இயக்கிய இவர், இஷான் கட்டர், மாளவிகா மோகனன் நடித்த ‘பியாண்ட் தி கிளவுட்ஸ்’ என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த அவர், இந்தி திரைப்படங்கள் குறித்து பேசியதாவது:

இந்தியாவில், திரைப்பட உருவாக்கத்துக்கான சிறந்த திறமையும் மகத்தான ஆற்றலும் அருமையான கலாச்சாரமும் இருப்பதாக நம்புகிறேன். மக்கள் தொகையை அதிகம் கொண்ட வளமான நாடு என்பதால் இங்கு சொல்லப்பட வேண்டிய கதைகள் அதிகம். ஆனால் பாலிவுட் அந்தத் திறனை சரியாகப் பயன்படுத்துவதில்லை. பாலிவுட் தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் பிரச்சினைதான்.

ஏனென்றால் மக்கள் இன்று சமூக ஊடகங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். அவர்களுக்குத் தேவையான தகவல்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. அவர்கள் அதிக விழிப்புடன் இருக்கிறார்கள்.

அதனால் இப்போது எடுப்பது போன்ற படங்களையே தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தால் இன்னும் நான்கைந்து ஆண்டுகளில், அதிகமான ரசிகர்கள் கிடைக்க மாட்டார்கள் என்று கவலைகொள்கிறேன். பாலிவுட் தங்கள்கதைகளை மாற்ற வேண்டும். இன்றைய காலகட்ட பார்வையாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் படங்களை உருவாக்க வேண்டும்.

சத்யஜித் ரே, ஷியாம் பெனகல் போன்றவர்கள் சிறப்பான படங்களைத் தந்தார்கள். அதுபோன்ற திரைப்படங்களை உருவாக்க வேண்டும். நான் பாலிவுட்டுக்கு எதிரானவன் இல்லை. அவர்கள் மாற வேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். இளம் தலைமுறையினர் திறமையுடன் இருப்பதாக நம்புகிறேன். அவர்கள் அதிசயங்களை நிகழ்த்துவார்கள்.

இவ்வாறு மஜித் மஜிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x