Published : 31 Jul 2023 05:05 AM
Last Updated : 31 Jul 2023 05:05 AM

பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: சிங்கப்பூரின் 7 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்

கோப்புப்படம்

சென்னை: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் ‘டிஎஸ்-சார்’ உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வணிக ரீதியாகவும் விண்ணில் செலுத்துகிறது.

அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டிஎஸ்-சார்’ உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் அமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து, பிஎஸ்எல்வி-சி56 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

இதற்கான 24 மணி நேரகவுன்ட் டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல்ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் நேற்று காலை 6.31 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

புறப்பட்ட 24 நிமிடங்களில்7 செயற்கைக்கோள்களும் 536 கி.மீ. தொலைவு கொண்ட திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இதில் முதன்மை செயற்கைக்கோளான டிஎஸ்-சார், 352 கிலோ எடை கொண்டது. அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான இது, சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இரவு, பகல் மற்றும் அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும்.

இதனுடன் ஏவப்பட்ட வெலாக்ஸ்-ஏஎம் (23 கிலோ), ஆர்கேட் (24 கிலோ), ஸ்கூப்-2 (4 கிலோ), நியூலயன் (3 கிலோ), கலாசியா (3.5 கிலோ), ஆர்ப்-12 ஸ்டிரைடர் (13 கிலோ) ஆகிய 6 சிறிய செயற்கைக்கோள்களும் சிங்கப்பூரின் உயர்கல்வி நிறுவனங்கள், மாணவர்களால் வடிவமைக்கப்பட்டவை. இவை பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும்.

இதுவரை 431 செயற்கைக்கோள்: 1993 முதல் இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 431 செயற்கைக்கோள்களை, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்-2 உள்ளிட்ட 2 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் கடந்த ஏப்.22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் ஏவுதலுக்குப் பிறகு, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் விஞ்ஞானிகள் மத்தியில் பேசியதாவது:

பிஎஸ்எல்வி வெற்றிக்கு பங்காற்றிய இஸ்ரோ குழுவினருக்குவாழ்த்துகள். சிங்கப்பூர் நாட்டுக்காக மட்டும் இதுவரை 4 முறை செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த வெற்றி இஸ்ரோவின் மீதானநம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம், பிஎஸ்எல்விராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு மிகவும் நம்பகமானது என்பது நிரூபணமாகியுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த ராக்கெட்டை முற்றிலும் வணிக ரீதியிலான உபயோகத்துக்கு பயன்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புவியில் இருந்து 530 கி.மீ.தொலைவு கொண்ட சுற்றுப்பாதைகளில்தான் அதிக அளவிலான செயற்கைக்கோள்கள், விண்வெளிக் கழிவுகள் உள்ளன. இதனால் 300 கி.மீ. புவி தாழ்வட்டபாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவது குறித்து, தற்போது ஏவப்பட்ட ராக்கெட்டின் பிஎஸ் 4 இயந்திரம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

வரும் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் அடுத்த பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட உள்ளது. தொடர்ந்து, ககன்யான் விண்கலம் இந்த ஆண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்தப்படும். அதேபோல, எஸ்எஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி உள்ளிட்ட ராக்கெட்களை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் கைவசம் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x