Last Updated : 31 Oct, 2023 04:15 AM

 

Published : 31 Oct 2023 04:15 AM
Last Updated : 31 Oct 2023 04:15 AM

விருதுநகர் மாவட்டத்தை பசுமையாக்க 4.25 லட்சம் விதை பந்துகள் தூவும் திட்டம் தொடக்கம்

விருதுநகர் அரசு ஐடிஐ வளாகத்தில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து விதைப் பந்துகளை வீசும் மாணவ, மாணவிகள்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தை பசுமையாக்கும் முயற்சியாக இரு நாட்களில் 4.25 லட்சம் விதைப் பந்துகள் தூவும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. நேற்றும், இன்றும் பள்ளி மாணவர்கள் மூலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விதைப் பந்துகள் தூவப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் மாபெரும் விதைப் பந்து தூவும் திட்டத் தொடக்க விழா விருதுநகர் அரசு ஐடிஐ வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர் கார்த்திக் வரவேற்றார். வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் தலைமை வகித்தார்.

மாணவ, மாணவிகளுக்கு விதைப் பந்துகளை வழங்கிமாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் சிறப்புரையாற்றினார். சமூக வனக்கோட்ட வன அலுவலர் நவநீதகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றினார். விருதுநகர் மாவட்ட வன விரிவாக்க அலுவலர் வேல்மணிநிர்மலா நன்றி கூறினார். விதைப் பந்துகள் தூவும் திட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கூறியதாவது: காற்று மாசு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்குத்தான் சுத்தமான காற்றின் மதிப்பு தெரியும். சுற்றுச்சூழல் பாதிப்பால் சராசரி ஆயுள் காலத்தில் 5 சதவீதம் நோயால் இறக்கும் சூழல் ஏற்படுகிறது. நம் வாழ்நாளை நீட்டிப்பதற்கான முதலீடுதான் இப்போது விதைப்பந்துகள் தூவுவது.

உலகில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். நம் நாட்டில் 25 சதவீதம்தான் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 10 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. ஒரு மரம் ஆயிரக்கணக்கான பறவைகளின் வசிப்பிடம். இப்போது விதைப்பது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்யும் தொண்டு. "நாளை நாம் இந்த மரத்தின் நிழலில் அமர்ந்து இளைப்பாறுவோம் என்ற உத்தரவாதம் இல்லாமல் மரங்களை நடுபவர்வாழ்க்கையை புரிந்துகொண்டவர்" என ரவீந்திரநாத் தாகூர் கூறியுள்ளார். நாம் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 10 மரக்கன்றுகளை நட்டு வைத்தாலே போதும்,நாளைய உலகம் பசுமையாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

இத்திட்டம் குறித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் 7 சதவீதம் மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. வறட்சியாக உள்ள 5 மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்றாக உள்ளது. இந்நிலையை மாற்ற மக்களின் பங்களிப்பு வேண்டும். குறிப்பாக மாணவர்களின் பங்கு மிக முக்கியம். தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார். மதுரை மாதா அமிர்தானந்தமயி மடம், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து விதைப் பந்துகளை உற்பத்தி செய்து வழங்கின. அதற்கான மஞ்சள் பைகளை ரோட்டரி கிளப்-ஆப் சிவகாசி கிரீன்ஸ் வழங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x