Published : 25 Mar 2019 08:53 AM
Last Updated : 25 Mar 2019 08:53 AM

ஈரோடு மக்களவைத் தொகுதியில்  சாலை பெயர் மாற்றம் தேர்தலில் எதிரொலிக்குமா ?

ஈரோடு மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் போட்டி, பிரப் சாலை பெயர் மாற்ற விவகாரம் ஆகியவற்றால் அதிமுகவிற்கு பலவீனம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மை யாகவும், ஆதிதிராவிடர், முதலியார் சமுதாயங்களைச் சேர்ந்தோர் அடுத்தடுத்த பெரும்பான்மை சமுதாயமாகவும் உள்ளனர்.

திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, அதிமுக வேட்பாளர் மணிமாறன், அமமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆகிய மூவரும் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இதில் கொமதேக ஆதரவு மதிமுக வேட்பாளருக்கு சாதகமாகவும், கொங்கு இளைஞர் பேரவை ஆதரவு அதிமுக வேட்பாளருக்கும் சாதகமாக உள்ளது. எனவே, கொங்கு சமுதாய வாக்குகள் மூன்று வேட்பாளர்களுக்கும் பிரிந்து செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுயேச்சை வேட்பாளரால் சிக்கல் முதலியார் சமுதாய வாக்குகள் தொகுதி முழுவதும் பரவலாக உள்ள நிலையில், தென்னிந்திய செங்குந்தர் மகாஜன சங்கத்தின் ஆதரவுடன், கல்வியாளர் அருணாசலம் சுயேச்சை வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். கல்வித்துறை, விளையாட்டு, ஜவுளித் தொழில் என பல்வேறு துறைகளில் 50 ஆண்டுகளாக ஈரோட்டில் முத்திரை பதித்துள்ள அருணாசலம், பிரிக்கும் வாக்குகள் அதிமுக, திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர் தொகுதி மக்கள்.

இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் அருணாசலத்திடம் பேசியபோது, ‘கொங்கு என்ற நிலப்பரப்பு குறிப்பிட்ட ஜாதியினருக்கே சொந்தம் என்பது போல் அரசியல் கட்சிகள் மாற்றிவிட்டன. இதனால் மற்ற சமுதாயத்தினரின் ஓட்டுக்களை மட்டும் குறிவைத்துப் பெறும் அரசியல்கட்சிகள், வெற்றி பெற்றபின்னர் எங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. முதலியார் சமூகத்தின் பலம் என்ன என்பதை வெளிப்படுத்தும் வகையில் செங்குந்த மகாஜன சங்கம் எனக்கு ஆதரவளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது’ என்றார்.

புதிய நீதிக்கட்சி அதிருப்தி

இதேபோல், முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள ஏ.சி.சண்முகம் தலைமையில் இயங்கும் புதிய நீதிக்கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்தாலும், ஈரோடு அதிமுகவினர் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என அதிருப்தியில் உள்ளனர். சிவகிரியில் புதிய நீதிக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் தங்க தம்பி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் புதியநீதிக்கட்சி இடம் பெற்றுள்ள நிலையில், வேட்பாளர் மனுதாக்கல் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் கட்சி நிர்வாகிகள் அழைக்கப்படவில்லை. இதனால் வேலூர் தொகுதியில் போட்டியிடும் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கட்சி நிர்வாகிகள் வேலூர் செல்வது, எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெயர் மாற்ற பிரச்சினை

ஈரோட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு மீனாட்சி சுந்தரனார் பெயரைச் சூட்ட வேண்டுமென முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால், பாலத்திற்கு ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டிவிட்டு, பிரப் சாலைக்கு மீனாட்சி சுந்தரனார் பெயரை சூட்டியுள்ளதால் முதலியார் சமுதாயத்தினர் வருத்தத்தில் உள்ளனர். அதே போல், பிரப் சாலை பெயர் மாற்றம் காரணமாக கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தோர் அதிமுகவின் மேல் அதிருப்தியில் உள்ளனர். இவ்விரண்டு காரணங்களும் அதிமுகவிற்கு பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட சமுதாய வாக்குகள், அதிமுகவையே சார்ந்து இருந்தன. தற்போது திமுக கூட்டணியில் உள்ள ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடு காரணமாக, இந்த வாக்கு வங்கியிலும் அதிமுக சரிவைச் சந்திக்கும் என்று அந்த சமுதாய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் முதலியார் சமுதாய வாக்குகள் மற்றும் ஆதி திராவிட சமுதாய வாக்குகள் கணிசமாக பிரியும்பட்சத்தில் அது அதிமுகவிற்கு பலவீனமாகவே கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x