Published : 19 Mar 2019 12:39 PM
Last Updated : 19 Mar 2019 12:39 PM

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்த அதிமுக: புதிய நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி

வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும் புதிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கூட்டாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிமுக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர். அதில், நீர் மேலாண்மை சிறப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது.

நீர் மேலாண்மை சிறப்புத் திட்டங்கள் :

1. நொய்யல் ஆற்றையும், மேற்குத் தொடர்ச்சி மலையையும் மையமாகக் கொண்டு, மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவ மழைக் காலங்களில் பெறப்படும் மழை, வெள்ள நீரை கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியப் பகுதி மற்றும் மதுக்கரை வனச் சரகம் வெள்ளப்பதி பிரிவு நண்டக்கரை, முண்டன்துறை, கோவைப்புதூர், போளுவாம்பட்டி வனச் சரகம், நரசீபுரம், தாளியூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் தடுப்பணைகளை அமைத்தும், குளம் குட்டைகளில் மழை நீரை நிரப்பியும், நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்.

2. காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் மோகனூர் தடுப்பணையில் இருந்து நாமக்கல் மாவட்டத்தின், மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்.

3. திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், காவிரி, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு இணைப்பு கால்வாய்த் திட்டம்.  இத்திட்டத்திற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தால், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும்.   

4. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் பெருமழைக் காலங்களில் பெறப்படும் வெள்ள உபரி நீரை, நீரேற்று முறை மூலம் சேலம் மாவட்ட நதிகளில் ஒன்றான சரபங்கா நதிக்கும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கும் கொண்டுசெல்லும் திட்டம்.

இவற்றை அதிமுக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x