Published : 24 Mar 2019 07:09 AM
Last Updated : 24 Mar 2019 07:09 AM

ஓட்டுக்கு லஞ்சம் தரும் கலாச்சாரம் மாறவேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வேண்டுகோள்

ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் தொண்டு செய்ய மாட்டார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். எனவே, ஊழலற்ற ஆட்சி அமையஉழைக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் மாற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு குமரி அனந்தன் நேற்று அளித்த சிறப்பு பேட்டி:

எப்போது, எப்படி அரசியலுக்கு வந்தீர்கள்?

என் குடும்பமே அரசியல் குடும்பம்தான். நான் 16 வயதில் அரசியலுக்கு வந்தேன். தமிழ் பாடத்தில் எம்.ஏ. பி.எச்டி. முடித்துவிட்டு, மதுரையில் தனிப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினேன்.

அப்போது 24 வயது இருக்கும். மதுரையில் பொதுக் கூட்டத்துக்கு காமராஜர் வருவதாக கூறினார்கள். அவர் வரும் வரை என்னை பேசச்சொன்னார்கள். நான் பேசிக்கொண்டுஇருக்கும்போதே, காமராஜர் வந்துவிட்டார். உடனே பேச்சை நிறுத்தினேன். பேச்சைத் தொடரும்படி கூறினார். நான் பேசி முடித்ததும் வாழ்த்தினார்.

சில நாட்கள் கழித்து சென்னைக்கு வந்து காமராஜரை சந்திக்கும்படி காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகே சம்பத் மூலம் தகவல் வந்தது. சென்னை வந்து காமராஜரை சந்தித்தேன்.

‘கட்சியில் சம்பளம் தரமாட்டோம். உன் குடும்பத்தை உனது பணக்கார மாமனார் கவனித்துக் கொள்வார். அதனால், உனக்கு பொறுப்பு அளிக்கிறேன்’ என்று சொல்லி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆக்கினார்.

முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் குறித்து..

காமராஜர் மறைவுக்குப் பிறகு 1977-ல் நாகர்கோவில் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டேன். ‘காமராஜரை போற்றிய தொகுதி, அவர் தொண்டன் என்பதே என் தகுதி’ என்ற முழக்கமே வெற்றிக்கு வித்திட்டது. என்னை எதிர்த்துப் போட்டியிட்ட மோசஸை நிறைய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.

அந்தக் கால தேர்தல்கள் எப்படி இருந்தன?

அப்போதெல்லாம் வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டுவோம். ரிக்ஷா அல்லது டாக்ஸியில் ஒலிபெருக்கி வைத்து வாக்கு சேகரிப்போம். பொதுக் கூட்டம் நடக்கும்.

ஆனால், வேட்பாளருக்கு கட்சி பணம் தராது. வேட்பாளரும் வாக்காளர்களுக்கு பணம் தந்தது கிடையாது. மக்களும் எதிர்பார்த்தது இல்லை.

உங்களது நாடாளுமன்ற அனுபவம் பற்றி..

நாடாளுமன்றத்தில் தமிழில்கேள்வி கேட்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவன் என்பதைபெருமிதத்தோடு கூறிக்கொள்கிறேன். நான் தமிழில் கேள்வி கேட்டதற்காக 8 முறை வெளியேற்றப்பட்டேன்.

அப்போதைய மத்திய அமைச்சர்ஜெகஜீவன் ராம் தலைமையில் மொழிக்குழு அமைக்க பிரதமர் மொரார்ஜி தேசாய் உத்தரவிட்டார். தமிழின் தொன்மையையும், பெருமையையும் அந்த குழுவில் எடுத்துச் சொன்னேன்.

பின்னர் நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் முறை நடைமுறைக்கு வந்தது. நான் மட்டுமேதமிழில் 50 கேள்விகள் வரை கேட்டுள்ளேன். இப்போதும் நாடாளுமன்ற நூலகத்தில் அவற்றைக் காணலாம்.

இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள்கூறும் அறிவுரை?

எல்லோருக்கும் தேசப்பற்று இருக்க வேண்டும். அத்துடன் ஊழலற்ற ஆட்சி அமைய உழைக்க வேண்டும். தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெறுபவர்கள் மக்களுக்கு தொண்டு செய்யமாட்டார்கள் என்பதை உணர வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் மாற வேண்டும்.

மத்தியில் பிரதமர் மோடியின் ஆட்சி பற்றி..

‘இந்து ராஜ்ஜியத்தை ஏற்கமாட்டேன்’ என்றார் மகாத்மா காந்தி. ஆனால், மத்திய பாஜக அரசு இந்துத்வாவை அதிகம் பரப்புகிறது. எல்லோரையும் சாதி, மத வித்தியாசம் இல்லாமல் ஒரே பார்வையாக பார்க்க வேண்டும். அதுவே சிறந்த ஆட்சிக்கு அடையாளம்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் பாரதமாதா கோயில் கட்டுவதற்கு 1923-ம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து நேதாஜி வழிகாட்டி சித்தரஞ்சன்தாஸை அழைத்து வந்து அடிக்கல் நாட்டினார் தியாகி சுப்பிரமணிய சிவா.

பாரதமாதா கோயில் கட்டுவதற்காக எனது 41 ஆண்டுகால போராட்டத்துக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. கோயில் கட்டுமானப் பணி கடந்த 3-ம் தேதி தொடங்கி நடந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக அதிமுக அரசுக்கு பாராட்டுகள்.

இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x