Published : 21 Apr 2014 10:14 AM
Last Updated : 21 Apr 2014 10:14 AM
தமிழக வீதிகள்தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்தீர்களே, ஏன் என கேட்க முடியுமா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் விருதுநகரில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலர் வைகோ வுக்கு ஆதரவு கோரி விருதுநகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். மக்களுக்கு திமுக அரசு எதையும் செய்யவில்லை என ஜெயலலிதா குறைகூறுகிறார். ஜெயலலிதாவின் சொத்துப் பட்டியலை திமுக துல்லியமாக வெளியிடுகிறது. அதேபோன்று, கருணாநிதியின் குடும்ப சொத்துப் பட்டியலை ஜெயலலிதா வெளியிடுகிறார். அவர்கள் சொல்வது அனைத்தையும் நான் அப்படியே ஒப்புக்கொள்கிறேன். இதிலிருந்து என்ன தெரிகிறது. திமுகவும் அதிமுகவும் தமிழகத்தை 45 ஆண்டுகள் மாறிமாறி சுரண்டி கொள்ளையடித்துள்ளது தெரிகிறது.
தமிழகத்தில் 55 லட்சம் ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அதை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கராகப் பிரித்துக்கொடுப்பேன் என்றார் கருணாநிதி. ஆனால், தமிழகத்தில் அவ்வளவு அரசு நிலம் இல்லை.
ஸ்டாலினுக்கு நான் சவால் விடுகிறேன். ஜெயலலிதா ஆட்சியில் ஆயிரம் தவறுகள் இருக்கட்டும், ஏதாவது ஒரு மேடையில் பிரச்சாரம் முடிவதற்குள் டாஸ்மாக் கடைகளை தமிழக வீதிகள்தோறும் திறந்தீர்களே. ஏன் என கேட்க முடியுமா? ஏனென்றால் அது கருணாநிதி தொடங்கியது. ஜெயலலிதா ஆட்சியில் தொடர்கிறது. 2014-15 பட்ஜெட்டில் ரூ.48 ஆயிரம் கோடி இலவசத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தின் மூலம் தமிழகத்திலுள்ள தரிசு நிலங்களில் 50 சதவீதத்தை விவசாய நிலங்களாக மாற்ற முடி யும். தமிழகத்தில் மாவட்டத்துக்கு 3 அல்லது 4 மருத்துவக் கல்லூரி களையும் மருத்துவமனைகளையும் தொடங்கலாம்.
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். தமிழத்தில் மாற்று அரசு வேண்டும். எனவே, இந்தத் தேர்தல் 2016-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT