Published : 13 Apr 2014 10:18 AM
Last Updated : 13 Apr 2014 10:18 AM
கூட்டணி என்பதற்காக எல்லாவற்றுக்கும் உடன்பட்டு போக மாட்டோம். எங்கே உடன்பட வேண்டுமோ அங்கே மட்டும் உடன்படுவோம் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர். பச்சமுத்துவை ஆதரித்து வைகோ சனிக்கிழமை பெரம்பலூரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது: நடக்க விருக்கும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தமிழக வெற்றியின் அவசியமின்றியே பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார். ஆனால் 39 தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் நமக்கான நீதி கிடைக்கும்.
முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை, இலங்கையுடனான மீனவர் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளில் தமிழகம் நீதி பெற நாம் 39 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும். இதுவரை தமிழகம் கொடூரமாக வஞ்சிக்கப்பட்ட நிலை மாற வேண்டும்.
1972-க்கு பிறகு திமுக, அதிமுக அவசியமில்லாத ஒரு மாற்று அரசியல் எழுச்சி உருவாகி உள்ளது. கருணாநிதி வரக்கூடாது என்பவர் ஜெயலலிதாவுக்கு வாக்களிப்பர். ஜெயலலிதா வரக்கூடாது என்பவர் கருணாநிதிக்கு வாக்களிப்பர். இப்படி எதிர்மறை ஓட்டுகளில் ஒருவர் மாற்றி ஒருவர் ஆதாயம் அடைந்த நிலை இனி இல்லை.
தனக்கு திருமணமான தகவலை மறைத் திருக்கிறார் மோடி என்று ஆவேசமாய் கருணாநிதி சுட்டிக் காட்டுகிறார். 1 விரல் அடுத்தவரை சுட்டும்போது 3 விரல்கள் தன்னை சுட்டும் என்பதை அறியாதவரா அவர். மோடியின் திருமணம் ஒரு பால்ய விவாகம். திருமணம் ஆனதும் மோடி சன்னியாசியாக இமயமலை சென்றார். அந்த பெண்மணி ஆசிரியை கனவில் படிக்கச் சென்றார். அவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபடவே இல்லை. ஆனால், கருணாநிதி அப்படியா? இதற்கு மேலும் கருணாநிதி பேசினால் என்னிடம் இருந்தும் சவுக்குகள் வெளியாகும்.
ஜெயலலிதா பிரதமர் கனவில் திளைக்கிறார். எந்த நாட்டுக்கு என்று தெரியவில்லை. ஏதேனும் தீவினை விலைக்கு வாங்கி அதற்கு பிரதமர் ஆகப்போகிறாரா. பேச்சுவார்த்தை என்ற பெயரில் கம்யூனிஸ்ட்களை தினந்தோறும் இழுத்தடித்து, கடைசியில் மரியாதை இல்லாது வெளியேற்றி இருக்கிறார். இந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு என்ற வேதனையில் இதை சொல்கிறேன் என்றார் வைகோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT