Published : 21 Apr 2014 08:38 AM
Last Updated : 21 Apr 2014 08:38 AM

லோக்பால் நியமனங்களில் ஐ.மு. கூட்டணி அவசரம் காட்டுவது ஏன்?- பாஜக

லோக்பால் நியமனங்களில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவசரம் காட்டுவது ஏன் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது, தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளை மீறும் செயலாகும் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், லோக்பால் நியமனங்களை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்திற்கு, பாஜக தேர்தல் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் "தேர்தல் முடிந்து புதிய அரசு உருவாகும் வரை பெரிய அளவிலான நியமனங்களை மத்திய அரசு மேற்கொள்வதை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

ராமகிருஷ்ணன் கடித விபரம்: "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பெரிய அளவிலான நியமனங்களை அவசர கதியில் செய்து வருகிறது. இதற்கு ஒரு சான்று, அண்மையில் கடற்படை தளபதி மாற்றப்பட்டது. இதே போல் ராணுவ தளபதியையும் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவத் தலைமை தளபதி விக்ரம் சிங் ஜூலை 31-ம் தேதி ஓய்வுபெறுகிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே புதிய தளபதியை நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தவிர, லோக்பால் நியமனத்திலும் அரசு அவசரம் காட்டி வருகிறது.

இத்தருணத்தில், லோக்பால் பரிந்துரைக் குழுவில் இடம்பெற ஆரம்பத்திலேயே மூத்த வழக்கறிஞர்கள் மறுத்து விலகிவிட்டது நினைவுகூரத்தக்கது. மூத்த வழக்கறிஞர்கள் எப்போது பரிந்துரைக் குழுவில் இருந்து விலகினார்களோ, அப்போதே லோக்பாலுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பணிகளும் களங்கப்பட்டு விட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேர்தல் முடியும் வரை, முக்கிய நியமனங்கள் தொடர்பான முடிவை நிறுத்திவைக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய செயல்பாடுகள் ஆரோக்கியமான ஜனநாயகத்தில் வரவேற்கத்தக்கதல்ல". இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த கடிதம் கிடைக்கப்பெற்றதாகவோ அல்லது கடிதத்தின் மீது முடிவு ஏதும் எடுத்துள்ளதாகவோ தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை எவ்வித விளக்கமும் இல்லை.

கடந்த 11-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் லோக்பால் தேவுக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில், ஏப்ரல் இறுதி வாரத்தில் தன்னை லோக்பால் தேர்வுக்குழுவினர் சந்திக்க முடியுமா என கோரியுள்ளதாக தெரிகிறது.

கடந்த வியாழனன்று உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுதாக்கல் செய்துள்ள காமன் காஸ் (Common Cause) தன்னார்வ தொண்டு நிறுவனம், லோக்பால் நியமனம் தொடர்பான விதிமுறைகளை எதிர்த்துள்ளதோடும் லோக்பால் நியமனம் நிறுத்திவைக்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில், பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி தனது வலைப்பூவில்: "விடைபெறும் தருவாயில் லோக்பால் நியமனத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அவசரம் காட்டுவது சரியாகாது" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x