Published : 30 Mar 2024 10:14 PM
Last Updated : 30 Mar 2024 10:14 PM

6,7,8-ம் வகுப்பு வினாத்தாள் செலவு: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நிதி வழங்க தமிழக அரசு மறுப்பு

கோப்புப்படம்

மதுரை: தொடக்கக் கல்வி இயக்குநரகம் மூலம் நடப்பாண்டு முதல் முதல்முறையாக 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி இறுதித்தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான செலவு தொகையை அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நிதி வழங்க மறுப்பால் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையின் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி இறுதித்தேர்வு ஏப்.2-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளி இறுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இதில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள் நகல் எடுக்கும் செலவை தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகம் சம்பந்தப்பட்ட வட்டார வள மையத்திற்கு நிதி வழங்கி வருகிறது. இதில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் பாகுபாடின்றி வினாத்தாள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஆனால், தற்போது முதல்முறையாக 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு வினாத்தாள் நகல் எடுக்கும் செலவு தொகையை ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று நடப்பாண்டு முதல் முதல்முறையாக செலவு தொகையை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக வட்டார கல்வி அலுவலகம் மூலம் அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களின் வங்கிக் கணக்கு செலவுத்தொகை வழங்குவதற்கு தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் நகல் எடுக்கும் செலவு தொகை வழங்கப்படவில்லை. அதனை பள்ளி நிர்வாகமே ஏற்க வேண்டும் என அரசின் பாரபட்சமான இந்த நடைமுறையால் அரசு உதவிபெறும் பள்ளி நிர்வாகம், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மாணவர்களின் வினாத்தாளுக்காக கட்டணம் வசூலிக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு மறுபரிசீலனை செய்து அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வினாத்தாள் நகல் எடுக்கும் செலவு தொகை வழங்கி இலவச வினாத்தாள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வளரும் தலைமுறையினரான மாணவர்களின் நலன் கருதி காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். இத்திட்டத்தை அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளார். அத்தகைய முதல்வரின் திட்டத்திற்கு எதிராக தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம் செயல்படுவதுபோல் தெரிகிறது.

தற்போது முதல்முறையாக 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களின் இறுதித்தேர்வு வினாத்தாள் செலவு தொகையை அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கவில்லை. இத்தகைய செயல்பாடானது ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பதைப் போன்றுள்ளது. இதனை தமிழக முதல்வர் கவனம் செலுத்தி அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x