Published : 30 Mar 2024 08:47 PM
Last Updated : 30 Mar 2024 08:47 PM

செய்தித் தெறிப்புகள்: ஸ்டாலின் Vs எல்.முருகன், ராமதாஸ் முதல் டேனியல் பாலாஜிக்கு புகழஞ்சலி வரை

விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு: மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் துரை.ரவிக்குமாரும் களம் காணும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மோடி பேச்சு - ஸ்டாலின் Vs எல்.முருகன்: தமிழக பாஜக பூத் தலைவர்களுடன் வெள்ளிக்கிழமை காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாடினார். அப்போது, “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என ஒவ்வொரு கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் சென்று சேர விடாமல், திமுக அரசு தடுத்து நிறுத்துகின்றனர். தடுத்து நிறுத்த முடியாத திட்டங்களில், அவர்களது ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள்” என்று விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலடி தந்துள்ள முதல்வர் ஸ்டாலின், “மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?

ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? ‘எங்கும் இந்தி! எதிலும் இந்தி!’ என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை! தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!" என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதிலடி தந்துள்ளார்.

சமூக நீதி - ஸ்டாலின் Vs ராமதாஸ்: “சமூக நீதி பேசும் மருத்துவர் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிரான பாஜகவுடன் கைகோத்த மர்மம் என்ன? மனசாட்சி உள்ள பாமக தொண்டர்கள்கூட ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு உள்ளனர்” முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி தந்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “பிற சமூகங்களின் கோரிக்கைகளைக் கேட்டுக் கேட்டு நிறைவேற்றும் மு.க.ஸ்டாலினுக்கு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மட்டும் மனம் வரவில்லை. ஸ்டாலினுக்கு சமூக நீதியில் உண்மையாகவே அக்கறை இருந்தால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி: பாஜகவில் மாநில பட்டியலின அணி தலைவராக இருந்த தடா பெரியசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தடா பெரியசாமி, “பாஜகவின் தவறான முடிவுகளால் அழுத்தம் ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துள்ளேன். எனது சொந்த தொகுதி சிதம்பரம். திருமாவளவன் இந்த தொகுதியில் பத்து ஆண்டுகளாக எம்.பி.யாக உள்ளார். அவர் எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை.

சிதம்பரம் தொகுதியில் நான் நின்றால் ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்து அண்ணாமலையுடன் ரகசிய கூட்டணி வைத்து திருமாவளவன் என்னை வேட்பாளராக அறிவிக்க விடாமல் தடுத்துள்ளார். இது மிகப் பெரிய சதி. திருமாவளவனை வெற்றி பெற வைப்பதற்காக பாஜக துணை போயுள்ளது. அண்ணாமலை எடுத்தது தவறான முடிவு” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் டேனியல் பாலாஜிக்கு புகழஞ்சலி: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி வெள்ளிக்கிழமை இரவு காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரது மறைவுச் செய்தி திரை உலகை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை ராதிகா வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “தமிழில் சித்தி நெடுந்தொடர் வாயிலாக நடிகராக அறிமுகமாகி, டேனியல் என்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ததன் காரணமாக டேனியல் பாலாஜி என அன்புடன் அழைக்கப்படும் சகோதரர், தமிழ் சினிமாவின் சிறந்த வில்லனாக பார்க்கப்படுபவர்.
இளம் வயதில் மறைந்து மீளாத்துயரில் ஆழ்த்திச் சென்றுவிட்டார்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் அதர்வா முரளி தனது எக்ஸ் தள பக்கத்தில், “வாழ்வில் நமக்கானவர்கள்தான் மிகவும் முக்கியம் என நினைக்கவைத்த மற்றொரு நாள் இது. இன்னும் அதிக நேரம் நாம் ஒன்றாக செலவிட்டிருக்கலாம் என தோன்றுகிறது... Rest In Peace பாலாஜி சித்தப்பா” என பதிவிட்டுள்ளார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற போலீஸ் காதாபாத்திரம் கவனம் பெற்று தந்தது. பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார் டேனியல் பாலாஜி . தொடர்ந்து ‘பொல்லாதவன்’, ‘வை ராஜா வை’,‘பைரவா’, ‘வட சென்னை’, ‘பிகில்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அவர் மறைந்தாலும் நடிப்பின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவரின் கதாபாத்திரங்கள் என்றும் நம்முடன் உறவாடிக் கொண்டிருக்கும் என்று திரையுலகினரும், ரசிகர்களும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை குழு: மக்களவைத் தேர்தல் 2024-க்கான பாஜகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா அறிவித்துள்ளார். அதன்படி, தேர்தல் அறிக்கையின் குழுவின் தலைவராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளராக நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“இண்டியா கூட்டணி மீதான அச்சத்தின் வெளிப்பாடே ஐ.டி நோட்டீஸ்”: “இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி, பாஜக கூட்டணியை தோற்கடிக்கப் போகிறது. இதை பாஜக புரிந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் தோல்வி அடையப் போகிறோம் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இருந்தும், அச்சத்தை ஏற்படுத்த அவர்கள் முயல்கிறார்கள்” காங்கிரஸுக்கு அனுப்பப்பட்ட வருமான வரித் துறை நோட்டீஸ் குறித்து கர்நாடக துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

“மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து விளைவித்த மோடி அரசு”: “பாஜக தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் மதச்சார்பின்மைக்கும், ஜனநாயகத்துக்கும் ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. ஐ.நா., அம்னஸ்டி இன்டர்நேஷனல் போன்ற சர்வதேச அமைப்புகளும், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளும் இந்தியாவின் சமீபத்திய சில நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளன. இங்கு ஜனநாயக வழிகள் பின்பற்றப்படுகின்றனவா என்று கேள்வியை அவை எழுப்புகின்றன” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுபான கொள்கை வழக்கில் மேலும் ஓர் அமைச்சரிடம் விசாரணை: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து டெல்லியின் போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலோட் சனிக்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராகினார்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா: அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு பல கோடி மதிப்பிலான ஆயுதங்களை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர், இஸ்ரேலுக்கு போர்க் கருவிகளை வழங்கக் கூடாது என எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவரின் மருமகள்: மக்களவை முன்னாள் சபாநாயகரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டிலின் மருமகள் அர்ச்சனா பாட்டில் சாகுர்கர், மகாராஷ்டிரா துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.

சுனிதா கேஜ்ரிவால் - கல்பனா சோரன் சந்திப்பு: தற்போது அமலாக்கத்துறை காவலில் இருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், "ஜார்க்கண்ட்டில் 2 மாதங்களுக்கு முன் என்ன நிகழ்ந்ததோ அதுதான் தற்போது டெல்லியில் நடந்திருக்கிறது. எனது கணவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதைப் போன்று அரவிந்த் கேஜ்ரிவாலும் சிறையில் இருக்கிறார்.

சுனிதா கேஜ்ரிவாலை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்; துயரத்தை பகிர்ந்து கொண்டேன். எங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம். எங்களுக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்தார். ஜார்க்கண்ட்டின் ஆதரவை நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம்" என்றார்.

வருமான வரித்துறை நோட்டீஸ்-சிபிஐ விளக்கம்: "வருமான வரித்துறை நோட்டீஸ் தொடர்பாக கட்சியின் தணிக்கையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

‘பாஜக வாஷிங் மெஷின்’- திரிணமூல் காங். ‘டெமோ’வுடன் கேலி: அஜித் பவார் அணியின் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரஃபுல் படேல் மீதான சிபிஐ வழக்கு முடித்து வைக்கப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியை வாஷிங் மெஷின் என திரிணமூல் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மேலும், மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையை தவறாக பாஜக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

“தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் பாஜக வாஷிங் மெஷின்”: "தாவூத் இப்ராகிமையும் சுத்தம் செய்யும் வாஷிங் மெஷின் பாஜகவிடம் உள்ளது" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா விமர்சித்துள்ளார்.

நடிகை ஹேமமாலினி Vs குத்துசண்டை வீரர் விஜயேந்தர்: உத்தரப் பிரதேசம் மதுராவில் போட்டியிடும் பாஜக எம்பி நடிகை ஹேமமாலினியை காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர்சிங் எதிர்கொள்கிறார். இவருக்கு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x