Published : 17 Mar 2023 07:20 AM
Last Updated : 17 Mar 2023 07:20 AM

சென்னை | ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி: மகாராஷ்டிர தொழிலதிபரிடம் ரூ.4 கோடி பறித்தது எப்படி?

பன்னீர் செல்வம், இம்தியாஷ் அகமது, நியமத்துல்லா

சென்னை: ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, மகாராஷ்டிர தொழிலதிபரிடம் ரூ.4 கோடி பறித்த விவகாரத்தில் பரபரப்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷியாமல் சாட்டர்ஜி (39),நாக்பூரில் சோலார் எனர்ஜி நிறுவனம் நடத்தி வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்துவதற்காக குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டி, பல்வேறு நபர்களை அணுகியுள்ளார்.

இதேபோல, சென்னையில் உள்ள கடன் பெற்றுத் தரும் நிறுவனத்தையும் அவர் அணுகினார். அப்போது, ரூ.100 கோடி கடன்பெற்றுத் தருவதாகக் கூறி, முன்பணமாக ரூ.4 கோடி பெற்றுக் கொண்டனர்.

ஆனால், கடன் பெற்றுத் தரவில்லை. மேலும், அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் செய்வதறியாது தவித்த சாட்டர்ஜி நேற்று முன்தினம் சென்னை வந்தார். சம்பந்தப்பட்ட அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த சாட்டர்ஜி, இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் மகேஸ்வரி, துணை ஆணையர் மீனா, உதவி ஆணையர் ராஜேசேகர் மேற்பார்வையில், ஆய்வாளர் சுமதிதலைமையிலான தனிப்படை போலீஸார் மோசடியில் ஈடுபட்ட சென்னை புத்தகரம் பன்னீர்செல்வம் (43), கொண்டித்தோப்பு இம்தியாஸ் அகமது என்ற சதீஷ்குமார் (37),பவன்குமார் என்ற நியமதுல்லா (45) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கைது செய்யப்பட்ட 3 பேரும் வெவ்வேறு வழக்குகளில் சிக்கி புழல் சிறையில் அடைபட்டிருந்தபோது, அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர், கடன் பெற்று தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர்.

முதல்கட்டமாக சமூக வலைதளங்களில் கடன் தேவை என்று பதிவிட்டிருப்போரைக் கண்டறிந்து, அதில் சிலரைத் தேர்வு செய்துள்ளனர். அதன்படி, மகாராஷ்டிர தொழிலதிபர் சாட்டர்ஜியைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர் ரூ.200 கோடி கடன் கேட்டுள்ளார்.

அவரிடம் பணம் பறிக்க முடிவு செய்த 3 பேரும், முதல் கட்டமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா காலனியில் உள்ள பண்ணை வீட்டை மாதம் ரூ.1.5 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து, அலுவலமாக மாற்றினர்.

பின்னர், அவரது நிறுவனத்தை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறி, மகாராஷ்டிரவுக்கு சிலரை அனுப்பி, சாட்டர்ஜி நிறுவனத்தை ஆய்வுசெய்து, ரூ.100 கோடி மட்டுமே கடன் தர முடியும் என்றும், இதற்காக ஆவணங்கள் எதுவும் தரத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் மகிழ்ச்சியடைந்த சாட்டர்ஜி சில தினங்களுக்கு முன் சென்னை வந்து, அவர்களது அலுவலகத்தைப் பார்த்துள்ளார். மிக பிரம்மாண்டமாக, நீச்சல் குளத்துடன் இருந்ததால், அதை நம்பிய சாட்டர்ஜி, முன்பணம் ரொக்கமாக ரூ.50 லட்சம், வங்கிமூலம் ரூ.3.5 கோடி கொடுத்துள்ளார். பின்னர், ரூ.100 கோடிகடனுக்கான செக்கைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்குப் பிறகு சென்னை வந்தபோது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாட்டர்ஜி அளித்த புகாரின் பேரில், 3 பேரையும் கைது செய்துள்ளோம். இதேபோல, மேலும் 2 பேரையும் ஏமாற்ற அவர்கள் திட்டமிட்டிருந்தனர். அதற்குள் 3 பேரையும் கைது செய்துவிட்டோம்.

இந்த மோசடிக்கு மேலும் சிலர் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனவே, சிறையில் உள்ள 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இவர்களிடம் வேறு யாரேனும் பணம் பறிகொடுத்திருந்தால், காவல் துறையில் புகார் அளிக்கலாம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x