Published : 17 Mar 2023 04:33 AM
Last Updated : 17 Mar 2023 04:33 AM

சென்னை பத்மாவதி தாயார் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளதையொட்டி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.படம்: ம.பிரபு

சென்னை: தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா வழங்கிய 6 கிரவுண்ட் நிலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.10 கோடி செலவில் பத்மாவதி தாயார் கோயில் கட்டப்பட்டுள்ளது. வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலில் மண்டபம், மடப்பள்ளி, புஷ்கரணி , வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைந்துள்ளன. கோயிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகளை கொண்டது. இதில் கலைநயமிக்க சிற்பங்களும் உள்ளன. கருவறையின் எதிரே பலிபீடம் உள்ளது.

கோயில் வளாகத்தில் ராமானுஜர், விஸ்வசேனா சிலைகளும் இடம் பெற்றுள்ளன. கோயில் கட்டிமுடிக்கப்பட்டு கொடிமரப் பிரதிஷ்டை நடந்தது. இதையடுத்து, திருப்பதியில் வடிவமைக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவார பாலகர்களான வனமாலி, பலாக்கினி சிலைகள், மூல விக்கிரகங்கள், கலசங்கள் சென்னை தியாகராய நகருக்கு கொண்டு வரப்பட்டன.

மூலவர் சிலைகளை, நெல்லில் பிரதிஷ்டை செய்து, ஜலதிவாசம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூல விக்கிரக பிரதிஷ்டை நேற்று நடந்தது. காலை 7 மணி முதல் சதுஷ்டான அர்ச்சனை, மூர்த்தி ஹோமம், பிராயசித்தம், பூர்ணாஹூதி செய்யப்பட்டது. இதையடுத்து, அஷ்ட பந்தன சகித மூல விக்கிரக பிரதிஷ்டை மகோற்சவம், துவஜஸ்தம்ப சய ஜல திவாசம், தீர்த்த பிரசாத ஹோஸ்தி நடைபெற்றது.

இந்நிலையில், சம்ப்ரோக்‌ஷண நாளான இன்று காலை 4 மணி முதல் 5 மணி வரை சதுஸ்தான அர்ச்சனை, ப்ராணபிரதிஷ்டா ஹோமம், பிராணதி தாஷவாயின்யாஸ் ஹோமம், மகாசாந்தி ஹோமம், ஆலய பிரதக்‌ஷிணா நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர், பிரதம ஆராதனம், கோப்ருஷ்டா, தர்ப்பணம், கன்யா, ஹேமாதிதர்ஷணமும், தொடர்ந்து காலை 10 மணிக்கு பத்மாவதி, ஸ்ரீனிவாசர் கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.

அடிப்படை வசதிகள்: கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு-புதுச்சேரி ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி தலைமையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் சேகர் ரெட்டி நேற்று கூறும்போது, “இடப்பற்றாக்குறையால், கும்பாபிஷேகத்தின் போது கோயிலுக்குள் அதிக அளவில் பக்தர்கள் வரமுடியாத சூழல் இருக்கிறது. கும்பாபிஷேகம் முடிவடைந்ததும் காலை 11 மணி முதல் இரவுவரை பொதுமக்கள், சுவாமி தரிசனம் செய்யலாம். பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கலந்து கொள்கிறார்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x