Published : 13 Mar 2023 07:21 AM
Last Updated : 13 Mar 2023 07:21 AM

பட்டுக்கோட்டை, தூத்துக்குடியில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடிகளை சுட்டுப் பிடித்த காவல் துறை

பிரவீன், ஜெயப்பிரகாஷ்

தஞ்சாவூர் / தூத்துக்குடி / திருச்சி: பட்டுக்கோட்டை, தூத்துக்குடி பகுதிகளில் கைது செய்ய வந்த போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றரவுடிகளை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்த சம்பவத்தின்போது காயமடைந்த 3 போலீஸார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பட்டுக்கோட்டை அருகே சிறப்பு உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூரை சேர்ந்தவர் ரவுடி ராஜ்குமார் (34). ஒரு வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருவாரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நீடாமங்கலம் ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் பாரதி( 32), வீரபாண்டியன்( 29), சூர்யா(21), அரசு(20) மாதவன்(21) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு நீடாமங்கலம் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் நடேச தமிழார்வன் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்கும் வகையில் இந்த கொலை நடந்தது போலீஸார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் மாவட்டம் அழகிரி காலனி பகுதியை சேர்ந்த ரவுடி பிரவீன்(25) என்பவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.

இவர், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு அங்கு சென்றனர். மனோரா அருகே நாடியம் சாலை பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றனர்.

அப்போது, பிரவீன் மறைத்து வைத்திருந்த அரிவாளால், தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவை(53) வெட்டிவிட்டு தப்ப முயன்றார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் துப்பாக்கியால் சுட்டதில் பிரவீனின் இடது முழங்காலில் குண்டு பாய்ந்தது.

பின்னர், காயமடைந்த ரவுடி பிரவீன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், மேல் சிகிச்சைக்காக பிரவீன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி.க்கள்திருவாரூர் டி.பி.சுரேஷ்குமார், தஞ்சாவூர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பழிக்கு பழி திட்டம்: இதனிடையே, கொலை செய்யப்பட்ட ரவுடி பூவனூர் ராஜ்குமாரின் உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள், இந்தக் கொலைக்கு பழிக்குப் பழி வாங்குவோம் எனக் கூறியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. எனவே, பழிக்குப் பழியாக கொலைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடியில் சம்பவம்: இதேபோன்று தூத்துக்குடி வழக்கறிஞர் கொலையில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி, அரிவாளால் போலீஸாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றபோது, போலீஸார் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்தனர்.

தூத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்தமாதம் 22-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதில், தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயப்பிரகாஷ் மட்டும் தலைமறைவாக இருந்தார்.

அவர் தூத்துக்குடி அருகே தட்டப்பாறை காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலையில் அங்கு சென்று சுற்றிவளைத்தனர். அப்போது, ஜெயப்பிரகாஷ் அரிவாளால் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் சுடலைமணி ஆகியோரை வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதில் அவர்களுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது.

உதவி ஆய்வாளர் ராஜபிரபு துப்பாக்கியால் சுட்டதில் ஜெயப்பிரகாஷின் இடது முழங்காலுக்கு கீழே குண்டுபாய்ந்தது. பின்னர் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் சுடலைமணி ஆகியோரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டிஐஜி, எஸ்.பி. விசாரணை: திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் சிகிச்சை பெறும் ஜெயப்பிரகாஷிடம் விசாரணை நடத்தினர். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர் சுடலைமணி ஆகியோருக்கும் டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் ஆறுதல் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x