Published : 27 Apr 2024 06:15 AM
Last Updated : 27 Apr 2024 06:15 AM

கொல்கத்தாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: கொல்கத்தா விமான நிலையத்தின் மேலாளருக்கு நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, கொல்கத்தா உட்பட இந்தியாவில் உள்ள 4 விமான நிலையங்களில் குண்டுகள் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

உடனே இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறை ஆகியவை இணைந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன.

அதன்படி, சென்னை விமான நிலையத்திலும் நேற்று பிற்பகலில் இருந்து தீவிர கண்காணிப்பும், சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. வழக்கமாக 3 அடுக்கு பாதுகாப்பில் இருக்கும் சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்காகப் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களுக்கு விமானங்களில் பயணிக்க வரும் அனைத்து பயணிகளையும் தீவிரமாகக் கண்காணித்து, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.விமான நிலைய வளாகத்திலும் மோப்ப நாய் உதவியுடன் வாகனங்களில் சோதனை செய்யப்படுகிறது.

பயணிகளுக்குக் கூடுதல் சோதனைகள் நடப்பதால், உள்நாட்டுப் பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சர்வதேச பயணிகள் 3 மணி நேரம் முன்னதாகவும் வருமாறு சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது.டெல்லியிலிருந்து மறு உத்தரவு வரும் வரை இந்தசோதனைகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x