Published : 21 Jan 2024 09:42 AM
Last Updated : 21 Jan 2024 09:42 AM

ஆலய கணக்கு வழக்குகள் குறித்து கேள்வி கேட்டவர் கொலை: கன்னியாகுமரியில் பங்குத்தந்தை தலைமறைவு

பங்குத்தந்தை ராபின்சன் மற்றும் கொலை செய்யப்பட்ட சேவியர் குமார்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆலய கணக்கு வழக்குகள் குறித்து கேள்வி கேட்டவர் கொலை செய்யப்பட்டார். ஆலய பங்குத்தந்தை தலைமறைவானார்.

திங்கள்நகர் அருகே உள்ள மைலோடு மடத்துவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராயப்பன். இவரது மகன் சேவியர் குமார் (45). இவர் அரசு போக்குவரத்துக் கழக கன்னியாகுமரி பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ஜெமினி (40) மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலயத்துக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

மைலோடு ஆலய பங்குத்தந்தையாக நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ராபின்சன் என்பவர் இருந்து வருகிறார். ஆலயம் மற்றும் பள்ளியின் கணக்கு வழக்குகளை சேவியர் குமார் அவ்வப்போது ஆலய நிர்வாகிகளிடம் கேட்பது வழக்கம். மேலும், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இதுதொடர்பான கேள்விகள் கேட்டு பதிவிட்டு வந்துள்ளார்.

எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம்: இதற்கிடையே, சேவியர் குமாரின் மனைவி ஜெமினிக்கு பள்ளி நிர்வாகம் மெமோ கொடுத்தது. அதை வாங்க ஜெமினி மறுத்ததால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவு ஜெமினி மற்றும் அவரது உறவினர்கள் சிலர், பங்குத்தந்தை ராபின்சனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

அப்போது, தனது கணவர் இனி இதுபோன்று சமூக வலைதளங்களில் எதுவும் பதிவிடமாட்டார் என்றும், தன்னை மன்னித்து ஆசிரியர் வேலை வழங்கும்படியும் ஜெமினி கூறியுள்ளார். சேவியர்குமார் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்தால், வேலை வழங்குவதாக பங்குத்தந்தை ராபின்சன் கூறியுள்ளார்.

நேற்று மதியம் சேவியர் குமார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வந்த மைலோடு பங்கை சேர்ந்த அன்பியத் தலைவர் வின்சென்ட் என்பவர் சேவியர் குமாரை அழைத்துள்ளார். பங்குத்தந்தையிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் கொடுத்தால், ஜெமினிக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக வின்சென்ட் கூறியுள்ளார். இதனை நம்பிய சேவியர் குமார் மயிலோடு ஆலய வளாகத்தில் உள்ள அருட்பணியாளர் இல்லத்துக்கு சென்றார்.

இதனிடையே, ஆலய வளாகத்தில் உள்ள பங்குத்தந்தை இல்லத்தில் சேவியர் குமார் இறந்து கிடப்பதாக, ஜெமினிக்கு தகவல் கிடைத்தது. உறவினர்களுடன் அங்கு சென்ற அவர், ரத்த வெள்ளத்தில் சேவியர் குமார் இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுதார். சேவியர் குமார் இறந்த தகவல் அறிந்ததும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த குளச்சல் சப் டிவிஷன் ஏஎஸ்பி பிரவீன்கவுதம், தக்கலை டிஎஸ்பி உதயசூரியன், இரணியல் இன்ஸ்பெக்டர் (பொ) பெருமாள், தக்கலை ராமச்சந்திரன், இரணியல் சப். இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் விசாரணை நடத்தினர். இஸ்திரி பெட்டியால் தலையில் அடிக்கப்பட்டு சேவியர்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. பங்குத் தந்தை ராபின்சன் தலைமறைவாகி விட்டார்.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சேவியர்குமார் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போலீஸார் முயற்சி செய்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேவியர்குமாரின் உறவினர்கள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

‘குற்றவாளிகளை கைது செய்தால்தான் உடலை எடுக்க விடுவோம்’ எனக்கூறி ஆலய வளாகத்தில் கோஷங்களை எழுப்பினர். அங்கு பதற்றம் ஏற்பட்டது. அங்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இறந்த சேவியர் குமாருக்கு மனைவி ஜெமினி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் 7-ம் வகுப்பும், இரண்டாவது மகள் 5-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x