Published : 10 Oct 2023 07:42 PM
Last Updated : 10 Oct 2023 07:42 PM
சென்னை: தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.99.999 எடுக்கப்பட்டுள்ளதாக திமுக எம்பி தயாநிதி மாறனின் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆன்லைன் வங்கி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக காவல் துறை தரப்பு கூறியது: திமுக எம்பி தயாநிதி மாறன் அக்.9-ம் தேதியன்று கொடுத்த புகாரில். தனக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதன்பின் தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.99.999 எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வங்கி ஊழியர் போல பேசி பணப் பரிவர்த்தனை விபரங்களை கேட்டு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாகவும், எந்த விபரங்களும் பகிரப்படாத நிலையிலும். அழைப்பு வந்த சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் அங்கீகரிக்கப்படாத பணபரிவர்த்தனை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மோசடி செய்தவர்களை கண்டுபிடிப்பதற்கும் இழந்த தொகையினை மீட்பதற்கும் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற ஆன்லைன் வங்கி மோசடிகளிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் 1930 என்ற சைபர் கிரைம் உதவி மைய எண்ணை அணுகுமாறும், ஆன்லைனில் www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் கிரைம் இணையதள பக்கத்தில் புகார் அளிக்குமாறும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT