Published : 10 Oct 2023 04:30 PM
Last Updated : 10 Oct 2023 04:30 PM

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை தகவல்

ஆ.ராசா | கோப்புப்படம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘திமுக எம்.பி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி திமுக எம்.பி.யுமான ஆ.ராசா, கடந்த 1999-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2010 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.92 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக சிபிஐ கடந்த 2015-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது. அதில், ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, மருமகன் பரமேஷ், கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியான சாதிக் பாஷாவின் மனைவி ரெஹா பானு மற்றும் ஆ.ராசாவின் நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 17 பேர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், 2-ஜி வழக்கு விசாரணையின்போது, பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது ஆ.ராசா உள்பட 6 பேர், ரூ.5.53 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், "ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியான கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி, பிப்ரவரியில் ரூ.4.56 கோடி பணம் பெற்றுள்ளார். ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து, காஞ்சிபுரத்தில் நிலம் வாங்கிக் கொடுத்ததற்கான கமிஷனாக அந்தத் தொகையை பெற்றதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த நிறுவனம் நில ஒப்பந்தம் மேற்கொண்டதை தவிர, வேறு எந்த ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

பின்னர், கோவை ஷெல்டர்ஸ் நிறுவனம், விவசாய நிலம் வாங்கியுள்ளது. இதன்மூலம், ஆ.ராசாவின் நெருங்கிய உறவினர்கள், இயக்குநர்களாக இருந்த அந்த நிறுவனத்துக்கு ரூ.4.56 கோடி கொடுத்தது உள்பட ரூ.5.53 கோடி மதிப்பிலான சொத்துகளை ஆ.ராசா சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளார். ஆ.ராசாவின் அறியப்பட்ட வருமான ஆதாரங்களில் இருந்து 579 சதவீத அளவுக்கு இந்த சொத்துகள் உள்ளன" என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில், 2-ஜி வழக்குத் தொடர்பான ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே 2-ஜி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரான ஆ.ராசா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால், அந்த வழக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ சரிவர நிரூபிக்கத் தவறியதால், கடந்த 2017-ம் ஆண்டில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தால் ஆ.ராசா விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x