Published : 16 Aug 2017 10:07 AM
Last Updated : 16 Aug 2017 10:07 AM

நானும் விவசாயிதான்: கமல்ஹாசன் பெருமிதம்

பாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சியை ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அமைப்பு திண்டிவனம் அடுத்த ஆவணிபூர் கிராமத்தில் வரும் 26-ம் தேதி நடத்த உள்ளது. ‘நானும் ஒரு விவசாயி’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதற்கான மோஷன் போஸ்டர், இலச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது. அவற்றை வெளியிட்டு கமல்ஹாசன் பேசியதாவது:

நம் நாட்டில் சுமார் 70 சதவீத பாரம்பரிய நாட்டு விதைகள் அழிந்துவிட்டன. 30 சதவீத பாரம்பரிய விதைகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று கூறப்படுகிறது. மாற்று விதையால் உருவாகும் செடியில் பூச்சிகள் உட்காராமல் இருக்க வேரில் விஷம் பாய்ச்சுகிறோம். இதனால் மறைமுகமாக நாமும் விஷம்தான் உண்கிறோம். உண்மையில், உண்ணும் உணவு விஷமானதற்கு எதிரிகள் காரணமல்ல; நம் பேராசையும், உணவுப் பொருட்கள் வியாபாரமானதும்தான் காரணம். இந்த நிலை மாறவேண்டும்.

இயற்கை உரம் கொண்டு பாரம்பரிய நாட்டு விதைகளால் உருவான உணவுகளை உண்போம். எஞ்சியுள்ள 30 சதவீத பாரம்பரிய நாட்டு விதைகளைக் காக்க ஒவ்வொருவரும் விவசாயியாக மாறுவோம்.

அடிப்படையில் நானும் ஒரு விவசாயிதான். என் புதிய வீட்டின் மாடியில் இயற்கை உரங்கள் போட்டு, இயற்கை விதைகளைக் கொண்டு மாடித் தோட்டம் அமைக்கத் தொடங்கியுள்ளேன். உலக சாதனைக்காக மட்டுமல்ல; இயற்கை சார்ந்த உணவுக்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும். இப்பணியில் ‘மாறுவோம் மாற்றுவோம்’ குழுவினரோடு என் நற்பணி மன்றத்தினரையும் ஈடுபடுத்த உள்ளேன்.

இவ்வாறு கமல் கூறினார். நடிகர் ஆரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x