Last Updated : 26 Aug, 2017 02:38 PM

 

Published : 26 Aug 2017 02:38 PM
Last Updated : 26 Aug 2017 02:38 PM

விமர்சன சர்ச்சை: விவேகம் எடிட்டர் ரூபன் விளக்கம்

'விவேகம்' படத்தின் விமர்சன சர்ச்சைத் தொடர்பாக, எடிட்டர் ரூபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. மேலும், சில விமர்சகர்கள் படக்குழுவை கடுமையாக சாடியும் இருந்தார்கள்.

இந்த விமர்சனங்கள் தொடர்பாக 'விவேகம்' படத்தின் எடிட்டர் ரூபன் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

சமீப காலங்களில் சினிமாவுக்கு எதிராக பல சக்திகள் இருப்பதைப் பார்க்கிறேன். தொழில்நுட்பம் கைக்குள் வந்துவிட்டதால் ஒவ்வொரு தனிநபரும் விமர்சகராக மாறிவிட்டனர்.

அதற்கும் மேல், சில ஒரு தலைபட்சமான, பணம் வாங்கும் விமர்சகர்கள், ரசிகர் என சொல்லி வெறுப்பை கக்குபவர்கள், ஒரு குறிப்பிட்ட நடிகர், இயக்குநரை வெறுப்பது அல்லது படத்தை வெறுப்பது என ஒரு சிலரும் இருக்கின்றனர். ஏனென்றால் எதிர்மறை எண்ணம்தான் உலகத்தில் இன்று அதிகம் விற்பனையாகிறது.

இது போன்ற தடைகளை எல்லாம் தாண்டி, எனது பட நாயகர்கள் அஜித், விஜய், இயக்குநர்கள் அட்லீ, சிவா அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் எனது தயாரிப்பாளர்கள் சத்யஜோதி மற்றும் தேனாண்டாள், இரு தரப்பும் பரஸ்பரம் அன்பும், மரியாதையும் கொண்டு, அவர்கள் தயாரிக்கும் படத்தின் டீஸர், ட்ரெய்லர், இசை என எந்த ஒரு விளம்பரமும் இன்னொரு பெரிய படத்தை பாதிக்காத வகையில் பார்த்துக்கொண்டனர். (உதாரணம்: 'மெர்சல்' சிங்கிள் வெளியீடு அன்று 'விவேகம்' ட்ரெயலர் வெளியீடு இருந்தது. ஆனால் மெர்சலுக்காக அது தள்ளிப்போடப்பட்டது. 'விவேகம்' வெளியீட்டுக்காக 'மெர்சல்' ட்ரெய்லர் வெளியீடு சில வாரங்கள் தள்ளிப்போடப்பட்டுள்ளது)

நாம் அனைவரும் சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பரஸ்பரம் மரியாதையும், முதிர்ச்சியையும் காட்டுவோம். இது ஒரு போட்டியாக இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக யாருக்கும் வன்மம் கிடையாது.

இவ்வாறு எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x