Last Updated : 15 Aug, 2017 04:56 PM

 

Published : 15 Aug 2017 04:56 PM
Last Updated : 15 Aug 2017 04:56 PM

நடிகர் சண்முகசுந்தரம் மறைவு: நடிகர் சங்கம் இரங்கல்

குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் காலமானதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று (ஆகஸ்ட் 15) காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. 'கரகாட்டக்காரன்', 'மவுனகீதம்', 'தாவணி கனவுகள்', 'நானே ராஜா நானே மந்திரி' உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

அவருடைய மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சண்முக சுந்தரம் அவர்கள் 1963-ம் ஆண்டு 'ரத்ன திலகம்', 'கர்ணன்' ஆகிய படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.கல்லூரியில் பயிலும் காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டு மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டு தன் கலை வாழ்க்கையை தொடங்கியவர்.

1972-ம் ஆண்டு 'வாழையடி வாழை' படத்தில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து இன்று வரை 'கரகாட்டக்காரன்', 'கிழக்கு வாசல்', 'நம்ம ஊரு ராசா', 'நண்பன்', 'அச்சமின்றி' உள்பட நூற்று கணக்கான படங்களில் நடித்து தனது இயல்பான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

'அன்பானவன் அசறாதவன் அடங்காதவன்' தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். மேலும் 'அண்ணாமலை', 'அரசியல்','செல்வி', 'வம்சம்' ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். தனது கடினமான உழைப்பாலும் திறமையாலும் நற்பெயரும் புகழும் பெற்று விளங்கியவர் சண்முக சுந்தரம் அவர்கள்.

அவரது மறைவு நாடக மற்றும் திரை உலகிற்கும் நடிகர் சமூகத்திற்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x