Published : 06 Oct 2023 07:12 PM
Last Updated : 06 Oct 2023 07:12 PM

‘Kannur Squad’ Review - காவல் துறை நடைமுறையும், ‘த்ரில்’ அனுபவமும்!

காவல் துறையை மையப்படுத்திய திரைப்படங்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஓர் எதிர்பார்ப்பு இன்றளவும் இருக்கவேச் செய்கிறது. ஆனால், பெரும்பாலான போலீஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் நாயக வழிபாடே பிரதானமாக இருக்கும். இதற்கு ஏராளமான திரைப்படங்களை உதாரணமாக கூறலாம். ஆனால், சமீபகாலத்தில், போலீஸ் கதைகளை மையமாக வைத்து வெளியாகும் திரைப்படங்களில் வழக்கமான டெம்ப்ளேட் மாறியிருக்கிறது. குறிப்பாக, கதைக்களத்தில் மாற்றங்கள் தென்படுகிறது. அதுபோன்ற சிரத்தையான கதையம்சத்துடன் வெளியான சில தமிழ் திரைப்படங்களில் 'தீரன் அதிகாரம் ஒன்று' முக்கியமான திரைப்படம். உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், நாயக வழிபாடு தென்பட்டாலும், அது அத்திரைப்படத்தின் கருவை சிதைத்திருக்காது.

ஆனால், காவல் துறையை மையமாக வைத்து மலையாளத்தில் பல க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேசன் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் பலவும் தனித்துவம் கொண்ட படைப்புகளாக இருக்கும். பொதுவாக, காவல் துறை பணி என்பது ஒரு குழு செயல்பாடு. நிஜத்திலும் காவல் துறை குழுவாக செயல்பட்டுதான் வழக்குகளை விசாரித்து பல குற்றவாளிகளை இன்றுவரை கைது செய்கின்றனர். ஆனால், திரைப்படம் என்று வரும்போது விருப்ப நாயகர்கள் ஒற்றை ஆளாய் எல்லா குற்றவாளிகளையும் அடித்துப்பிடித்து வெற்றி பெறும் வகையில்தான் போலீஸ் திரைப்படங்கள் நம் மண்டைக்குள் திணிக்கப்பட்டிருக்கிறது. இந்த திணிப்புகளில் சிக்காமல், லேசான ஹுரோயிஸ டச் அப்களுடன் வெளிவந்துள்ள மலையாளத் திரைப்படம்தான் 'கண்ணூர் ஸ்க்வாட்' (Kannur Squad).

வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்காக, கண்ணூரின் முன்னாள் காவல் துறை அதிகாரி ஸ்ரீஜித்தால் உண்மையாகவே உருவாக்கப்பட்டதுதான், 4 பேரைக் கொண்ட கண்ணூர் ஸ்க்வாட். அந்தக் குழு 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் விசாரித்த இருவேறு வழக்குகளைத் தழுவியதே இத்திரைப்படம். அந்தக் குழுவின் பெயரே இப்படத்துக்கு தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளைப் பின்பற்றுவதும், கட்டளைகளுக்கு கீழ்படிதலும்தான் காவல் துறையின் இரண்டு கண்கள். படிநிலைகளின் பாரத்தின் கனத்தையும், அழுத்தத்தையும் நன்கு தெரிந்து சுமப்பவர்கள் காவல் துறையினர். இத்தகைய காவல் துறை நடைமுறைகளை கதைக்கருவாக கொண்ட திரைப்படம்தான் இந்த 'கண்ணூர் ஸ்க்வாட்'. உயர் அதிகாரிகள் பிறப்பிக்கும் கட்டளைக்குள், விரிந்திருக்கும் அதிகார வரம்புக்குள், பணியாற்றும் அடிமட்ட காவலர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணி பங்களிப்பும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை வலிகளையும் ஆவணப்படுத்துகிறது இந்த திரைப்படம்.

ஏஎஸ்ஐ ஜார்ஜ் (மம்முட்டி) தலைமையிலான ஜெயன் (ரோனி டேவிட்), ஜோஸ் (அஜீஸ் நெடுமங்காட்), ஷபி (ஷபரீஷ் வர்மா) அடங்கிய 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழுதான் ' கண்ணூர் ஸ்க்வாட்'. பல சிக்கலான வழக்குகளை நேர்த்தியாக புலன் விசாரித்து தீர்வு காணும் இக்குழுவுக்கு கிடைக்கும் பாராட்டும், அவர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரமும், காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கே பொறாமையை ஏற்படுத்துகிறது. இந்தக் குழுவில் லஞ்சம் பெற்ற செய்தி, ஊடகங்களிலும், சமூக வலைதளத்திலும் தீயென பரவ, எதிர்க்கட்சிகள் இப்பிரச்சினையை கையிலெடுக்கிறது. கண்ணூர் ஸ்க்வாட் கலைக்கப்படுகிறது. இந்த நேரத்தில், காசர்கோட்டில் தொழிலதிபர் ஒருவர் வதைக்குள்ளாக்கி கொல்லப்படுகிறார். அவரது குடும்பத்தினரும் மிக கொடூரமாக தாக்கப்பட்டு, கொள்ளை, பாலியல் வன்கொடுமையும் நிகழ்த்தப்படுகிறது.

காவல் துறை ஜார்ஜ் தலைமையிலான கண்ணூர் ஸ்க்வாட்டை திரும்ப அழைக்கிறது. லஞ்சம் வாங்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலரையும் குழுவில் சேர்க்க சம்மதம் தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பத்து நாட்கள் கெடுவும் விதிக்கப்படுகிறது. தொழிலதிபரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறார்? கொலையாளிகள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? பத்து நாட்களுக்குள் கன்னூர் ஸ்க்வாட் குழுவினர் கொலையாளிகளை பிடித்தார்களா? இல்லையா? - இதுதான் படத்தின் திரைக்கதை.

இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் ஒளிப்பதிவாளரான ராபி வர்கீஸ் ராஜ், போலீஸ் கதை என்பதால் நிறைய ட்விஸ்ட் அண்ட் டர்னஸ் எல்லாம் வைத்து பார்வையாளர்களை குழப்பாமல், சொல்ல வேண்டியதை நேர்க்கோட்டில் துரத்தி கதை சொல்லியிருக்கிறார். அதைவிட நேர்த்தியாக இருக்கிறது கதாப்பாத்திரங்களின் தேர்வு. மம்முட்டி உள்ளிட்ட 4 பேர் அடங்கிய அந்தக் குழு அத்தனைப் பொருத்தமானதாக இருக்கிறது. அந்த நால்வர் அடங்கிய குழு வரும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக இருப்பதுடன், அந்த நால்வருமே உண்மையான போலீஸ் என்பதை நம்ப வைக்கிறது.

இந்தப் படத்தில் மிக முக்கியமானது போலீஸார் மேற்கொள்ளும் விசாரணை குறித்தவை. சமீபகால குற்றப் புலனாய்வு விசாரணைகளில் தடயங்கள் அதிமுக்கியப் பங்கு வகிப்பவை. அபரிமிதாக கிடைக்கும் ஆதாரங்களை உள்ளடக்கிய அந்த தகவல்களை பகுப்பாய்வு செய்து, தங்களது விசாரணையுடன் தொடர்பு கொண்ட ஆதாரங்களை மட்டும் சேகரித்து, குற்றவாளிகளை நெருங்கும் விசாரணை முறை டீட்டெயிலிங்கை சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குநர்.

முஹம்மது ஷாபி மற்றும் நடிகர் ரோனி டேவிட் ராஜ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள இத்திரைப்படத்தில் கண்களை அகல விரியச் செய்யும் பெரிய திகைப்பும் திருப்பமும் இல்லை . இவை இப்படத்துக்கு மைனஸாக கண்ணில்பட்டாலும், இயக்குநர் ராபி வர்கீஸ் ராஜின் மேக்கிங் அவற்றை மறைத்துவிடுகிறது. முதல் பாதியில் உணரப்படும் லேசான தொய்வும் இரண்டாம் பாதியின் விறுவிறுப்பால் சரிசெய்யப்படுகிறது.

நடிகர் மம்முட்டியின் நட்சத்திர பிரதிபலிப்பு தவிர்க்க முடியாதது. அவரது அந்த பிம்பத்தை வெளிப்படுத்தும் வகையில் சில சண்டைக் காட்சிகளும், 'மாஸ்' வசனங்களும்கூட படத்தில் உள்ளன. இவையெல்லாம் மீறி ஏஎஸ்ஐ ஜார்ஜ் கதாப்பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் மம்முட்டி. அவருடன் வரும் மற்ற மூவரும்கூட தங்களுக்கான கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

அதேபோல், இந்தப் படத்தின் டெக்னிக்கல் டீமின் மெனக்கெடல்கள், கண்ணூர் ஸ்க்வாடை ஒரு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்கான மெட்டீரியலாக உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, படத்தின் ஒளிப்பதிவாளர் முகமது ரஹில் மற்றும் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம், எடிட்டர் பிரவீன் பிரபாகர் ஆகியோரது பணி பாராட்டும்படியாக இருக்கிறது.

இவையெல்லாம் இருந்தாலும்கூட, காவல் துறை நடைமுறைகளை மையப்படுத்தி ஏற்கெனவே வெளிவந்துள்ள உண்டா (Unda), குட்டாவும் சிக்‌ஷாயும் (Kuttavum Shikshayum) , தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களின் தாக்கத்தை உணர முடிவதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், இந்த திரைப்படங்களில் காணப்படுகிற ஒற்றுமைகள், மாறுபட்ட காவல் துறை நடைமுறைகள் குறித்து பேசியிருக்கும் கண்ணூர் ஸ்க்வாட் புதிய திரைப்படமாக இருப்பதை தடுக்கிறது. செப்டம்பர் 28-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x