Published : 10 Feb 2024 09:08 AM
Last Updated : 10 Feb 2024 09:08 AM

இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு: மாநிலம் முழுவதும் ஜூன் 23-ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிகளில் காலியாக உள்ள 1,768 இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நேற்று வெளியிட்டது.

மார்ச் 15-க்குள் விண்ணப்பம்: அதன்படி இடைநிலை ஆசிரியர்பணித் தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு பிப்.14-ல் தொடங்கி மார்ச் 15-ம்தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.trb.tn.gov.in எனும் வலைதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

இடைநிலை ஆசிரியர் பணித் தேர்வு கொள்குறி வகை (ஒஎம்ஆர்) விடைத்தாள் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. வினாத்தாள் இரு பிரிவுகளாக இருக்கும். முதல் பிரிவு கட்டாய தமிழ் தகுதித் தேர்வாகும். இதில் 30 கேள்விகள் இடம்பெறும். அதற்கு 50 மதிப்பெண். தேர்வெழுத 30 நிமிடம் அவகாசம் வழங்கப்படும். அதில் குறைந்தது 20 மதிப்பெண் எடுக்க வேண்டும்.

தமிழ் கட்டாய தகுதித் தேர்வு: அடுத்ததாக பொதுப் பிரிவு வினாத்தாளில் 150 வினாக்கள் கேட்கப்படும். தேர்வுக்கு 3 மணி நேரம் அவகாசம் தரப்படும். மொத்தம் உள்ள 150 மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 60-ம், இதர பிரிவினர் 45-ம் எடுக்க வேண்டும். கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பொதுப் பிரிவு விடைத்தாள் திருத்தப்படும்.

இதற்கிடையே இந்த போட்டித்தேர்வை டெட் முதல் தாள் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே எழுத முடியும். அதன்படி இத்தேர்வை எழுதுவதற்கு தமிழகம் முழுவதும் 47,213 பேர் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். துறைவாரியான காலிப் பணியிடங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறை, பாடத்திட்டம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று டிஆர்பி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குபின்பு இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், அரசுப் பள்ளிகளில் மட்டும் 8,643 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x