Published : 23 Apr 2023 01:17 PM
Last Updated : 23 Apr 2023 01:17 PM
திருப்பூர்: தொழிலாளர் வேலை நேரம் தொடர்பான தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதாவுக்கு திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் (பியோ) ஏ.சக்திவேல்: 2030-ம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரத்தை 82 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு செயல்வடிவங்கள் அளிக்கப்பட்டு வருவதை வரவேற்கிறோம். குறிப்பாக, தமிழக சட்டப்பேரவையில், தொழிலாளர் பணி நேரம் 8 மணி நேரம் என்பதை 12 மணி நேரமாக உயர்த்தி அறிவித்துள்ளதால் உற்பத்தியும், வேலை வாய்ப்பும் பெருகும்.
இதன் மூலமாக தமிழகத்தின் பொருளாதார இலக்கு விரைவில் பூர்த்தியடையும். சட்டப் பூர்வமாக 12 மணி நேரம் வேலை என்பதால், வெளிநாட்டு ஆர்டர் பெறுவதில் பெரிய சிரமங்கள் இருக்காது. வெளிநாட்டு ஆர்டர்குவியும்போது, அதிகமாக வேலை அளிக்கலாம். இது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. அனைத்து தொழிலாளர்களும் சட்டப் பூர்வமான முறையில் கூடுதல் வருவாய் ஈட்டவும் வழி வகுத்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன்: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பெருமளவு வலுசேர்க்கும். திருப்பூரின் ஆயத்த ஆடை தொழில் என்பது பருவகாலம் சார்ந்தது. முந்தைய சட்டத்தின் படி, உச்ச காலங்களில் ஓவர் டைம் வேலை வாய்ப்புகள் இருந்தாலும், அந்த வாய்ப்பை தொழிலாளர்களுக்கு வழங்க இயலாத நிலை இருந்தது.
இதனால், வேலைவாய்ப்புகளை இழந்ததோடு பொருளீட்டும் வாய்ப்பையும் இழந்தனர். குறித்த நேரத்தில் உற்பத்தியை முடிக்க இயலாமல், ஆர்டர்களை கப்பலில்அனுப்புவதற்கு மாறாக விமானத்தில் 10 மடங்கு கட்டணம் செலுத்தி அனுப்பும் நிலைகளும் இருந்தன. இதனால் நிறுவனத்தின் முதலீடு பாதிக்கப்பட்டது.
இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழி லாளர் நலத்துறை அமைச்சர்கணேசன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT