Published : 31 Dec 2022 01:37 PM
Last Updated : 31 Dec 2022 01:37 PM

இந்திய பொருளாதாரம் 2023 - பணம் கைமாறி செல்வது எந்நாளும் பலம்!

“எல்லோர் கையிலும் மொபைல் இருக்கிறது. அதன் மூலம் கொடுக்கல் வாங்கல் நடக்கிற டிஜிட்டல் காலத்துக்கு வந்துவிட்டோம். இன்னமும், மக்கள் கையில் பணம் இல்லை என்று புகார் சொல்வதில் அர்த்தமே இல்லை” இப்படி சிலர் எண்ணக் கூடும். எந்த வடிவில் இருக்கிறது என்பதல்ல; இந்த இருப்பு எத்தனை பேர் கையில் இருக்கிறது..? அதை விடவும், இந்தப் பணம் எத்தனை கைகளுக்கு மாறிச் செல்கிறது..? இதைக் கொண்டுதான் பொருளாதாரத்தின் துடிப்பு தீர்மானிக்கப்படுகிறது.

பணவீக்கம் – பணப்புழக்கம் இரண்டும் முற்றிலும் வேறானவை. முன்னது பிணி; அபாயம். பின்னது பொருளாதார இயக்கம். பணம், கைமாறிச் சென்றுகொண்டே இருக்க வேண்டும். பணத்தின் பண்பும் பயனும் அதுவே. ரூபாய் நோட்டு, எத்தனை முறை எத்தனை பேருக்குக் கைமாறிச் செல்கிறதோ அந்த அளவுக்கு அது அத்தனை பேருக்கு பயன்பட்டுள்ளது. நிறைய கைகளில் மாறி இருக்கிறது எனில்,பணப்புழக்கம் சிறப்பாக இருப்பதாய்ப் பொருள். மாறாக, பணம் சிலர் கைகளில் தேங்கிவிட்டால், அந்த அளவுக்குப் பொருளாதாரம் முடங்கி விடுகிறது.

பணப்புழக்கம் பற்றி ஆய்வுகள், அறிக்கைகள் மூலம்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. நாம் வாழும் பகுதியில், நம்மைச் சுற்றியுள்ள அத்தியாவசியக் கடைகள் எந்த அளவுக்கு விறுவிறுப்பாக இயங்குகின்றன என்பதைப் பார்த்தால் போதும். விளங்கி விடும்.

“இல்லையே… மக்கள் வாங்கிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? கடைத் தெருக்களில் எவ்வளவு கூட்டம்” என்று தோன்றுகிறதா..?

போட்டித் தேர்வுகளுக்கு பல லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். சில நூறு பேர் மட்டும் மீண்டும் மீண்டும் தேர்ச்சி பெறுகிறார்கள். புதிதாய் தேறுகிறவர்கள் மிகக்குறைவு. அப்படித்தான் இதுவும்.வாங்குவோர் அதிகம் என்கிறோமே.. வாங்காதவர்கள்? மிக மிக அதிகம். கையில் அட்டை மட்டும் உண்டு; அதில் நூறு ரூபாய் கூட இல்லாதவர்கள் எத்தனை பேர்..? இத்தனை கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன என்கிற வரை அது சாதனைதான். ஆனால் இந்தக் கணக்குகளில் எவ்வளவு இருப்பு இருக்கிறது?

இந்தியாவில் நிதி நடவடிக்கைகள் நவீனமாகிவிட்டன. டிஜிட்டல் பொருளாதாரம் மிகப் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. வரவேற்கத்தக்க முன்னேற்றம். டிஜிட்டல் வடிவத்தில், கணக்கில் வராத பணத்துக்கு சாத்தியம் இல்லை. உண்மை. ஆனால், இதுபொருளாதார வளர்ச்சிக்கான அடையாளமா..?

சாமான்யனின் கையில் அல்லது கணக்கில் பணம் சேர்ந்துள்ளதா..? ஆம் எனில், புதிதாக எந்த வழியில், என்ன வருமானம் வருகிறது..? அப்படி எதுவும் இல்லை.

‘ஒட்டுமொத்த வளர்ச்சி’ – ‘உள்ளடக்கிய வளர்ச்சி’ இரண்டுக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதாகத் தீர்மானமாய் தோன்றுகிறது. இந்த இடைவெளி குறைந்தால், ஆரோக்கியம்; கூடிக் கொண்டேபோனால், ஆபத்து.

மேதைகளின் அறிவுரைகள், குழுக்களின் பரிந்துரைகள், முதலீட்டாளர் மாநாடுகள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், திட்ட வரைவு அறிக்கைகள் ஆகியன இரண்டாம்பட்சம்தான். அதிகாரத்தில் இருக்கும்கொள்கை வடிவமைப்போர் தொடங்கி அப்பாவி அடித்தட்டு மக்கள் வரை எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும்: ‘பொருளாதாரம்’ – நிபுணர்களின் பரிந்துரைகளால் அல்ல; நியாயங்களின் மீது கட்டமைக்கப்பட்டால் இன்னும் பல மக்களுக்கு பலன் தரும்.

மரபுத் தொழில்களைப் புறக்கணித்தல், பல்லாயிரம் கோடிகளில்இயங்கும் தொழில்களுக்கு முன்னுரிமை தருதல், அளவற்ற அந்நியமுதலீடுகளை அனுமதித்தல், இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு துணை போதல்… வளர்ச்சிக்குஅல்ல; வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்.எல்லாரையும் உள்ளடக்கிய ‘மக்கள்பொருளாதாரம்’ என்கிற கோணத்தில் அரசுகள், பொருளாதாரத்தைஅணுகினால் சிறப்பாக இருக்கும்; சாமான்யனின் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். இந்த வகையில், பலதுறைகளில் சீர்திருத்தம், மீள்பார்வை, மறுமதிப்பீடு நிச்சயம் தேவை.

(அடுத்து - மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்...)


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x