Published : 30 Dec 2022 10:56 AM
Last Updated : 30 Dec 2022 10:56 AM

இந்தியப் பொருளாதாரம் 2023 - வேலைவாய்ப்பை உருவாக்க என்ன திட்டம்?

பிரதிநிதித்துவப்படம்

உலக அரசியல் தலைவர்களை அச்சுறுத்துகிற, 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் பிரச்சினை–வேலையின்மை. அடுத்த உலகப்போருக்கு, தண்ணீர் காரணமாக இருக்கும் என்கிற கவித்துவக் கண்டுபிடிப்பை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, உலகப் பொருளாதாரத்தை கவனித்தால், வேலையின்மை ஒரு சர்வதேச பிரச்சினை என்பது புரியும்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் வேலையில்லா இளைஞர்கள் எந்நேரமும் கொந்தளித்துப் புறப்படலாம் என்கிற ஆபத்து தலைமேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் வேலைச்சந்தைக்கு வருகிற புதியவர்கள் கிடைப்பதைக்கொண்டு சும்மா இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் ஓரளவு நாகரிகமான வருமானம் தருகிற வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிற எந்தத் திட்டமும் எந்த நாட்டுத் தலைவரிடத்தும் இல்லை.

இந்தியாவில் இன்னமும் அரசுப் பணிகளின் மீதான ஈர்ப்பு குறையவில்லை. அதிகாரம், சமூக அந்தஸ்து, பணிப் பாதுகாப்பு, நாகரிகமான ஊதியம் என்று பல ஆதாயங்கள், அரசுப் பணிகளில் மறைந்து வருகின்றன. அரசுதான், சிறந்த பணி வழங்குவோராக, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருத்தல் வேண்டும். ஆனால் இல்லை. தற்காலிகம், தொகுப்பூதியம், பணியாளர் சலுகைகள் குறைப்பு, உரிமைகள் பறிப்பு… எல்லாம், அரசுப் பணிகளில் இயல்பாகி விட்டன. பல
லட்சம் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன. சில நூறு பதவிகள் மட்டும் நிரப்பப்படுகின்றன.

காரணம்–நிதி இல்லை. மாநிலங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும்போது, நாடு எப்படி வலிமையாக இருக்க முடியும்..? ஆனால், வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதில் மாநிலங்கள் இன்
னும் சிறப்பாக செயல்பட முடியும். உள்ளூர் தொழில்கள், உள்ளூர் சந்தைகள், உள்ளூர் பொருளாதாரத்தில் தீவிர கவனம் செலுத்துவதன் மூலம், புதிய தொழில் முனைவுகளுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் நாடு மேம்பட முடியும். ஆனால் இவற்றில் கவனம் செலுத்தப்படுவதில்லை.
வசிக்கும் இடத்துக்கு அருகில் பள்ளி இருப்பதுஎந்த அளவுக்கு ஆரோக்கியமனாதோ, அதேபோல்
வாழும் இடத்துக்கு அருகிலேயே வேலைவாய்ப்பு என்பதும் ஆரோக்கியமான ஒன்று. புலம்பெயர் தொழிலாளர்கள் கூறுகிற செய்தி என்ன..?

பிறந்து வளர்ந்த மண்ணில் வேலைவாய்ப்புக்கு வழியில்லை. வேறு ஏதேனும் மாநகரில் நாட்கூலி வேலை கிடைக்குமா என்று நகர்ந்து செல்கிறார்கள். உடலுழைப்பு தொழிலாளர்கள் மட்டுமல்ல; ஒருவகையில், கணினிசார் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் அடங்குவர். வருமானம், பணிச்சூழல், பணித்தன்மை ஆகியன புலம்பெயர் என்ற அடையாளத்தை மறைத்து விடுகின்றன. அவ்வளவுதான். பெருந்தொற்றுக்குப் பிறகு சில நாட்களுக்கு உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பெருக்குதல் பற்றிப் பேசப்பட்டது. தொடர்ந்து இந்தத் திசையில் என்ன திட்டங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன..?

வெளியில் தெரிகிறாற்போல் எதுவும் இல்லை. மாகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தரப்படும் பணி ஒரு நிவாரணம். அது வேலைவாய்ப்பு அல்ல. இதன்கீழ் உள்ள பயனாளிகளையும் சேர்த்தால், வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகமாகும். அதிக ஏற்ற இறக்கம் இல்லை என்றாலும், தனியார் வேலை வாய்ப்புகள், சில துறைகளில் கூடியும், பல துறைகளில் குறைந்தும் உள்ளன. பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து பல நிறுவனங்கள் விரைவாகவே மீண்டு வந்துவிட்டன. இதற்கு இந்திய அரசு வழங்கிய சில உதவிகள் காரணம். மறுப்பதற்கில்லை.

அதிக முதலீடு இன்றி, நீண்டகால பாதிப்புகள் இல்லாமல், தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ‘காந்தியப் பொருளாதாரம்’ காட்டுகிற வழி, மிகுந்த பயன் அளிப்பதாய் இருக்கலாம். என்றேனும் ஒரு நாள், அரசுகள் இந்தப் பக்கம் தனது கவனத்தைத் திருப்பலாம். இப்போதைக்கு நாம் முன் வைக்கும் வேண்டுகோள் இதுதான்: 2023-ல் இந்தியப் பொருளாதாரத்தின் குவிமையமாக ‘அனைவருக்கும் வேலைவாய்ப்பு’ திட்டம் இருத்தல் வேண்டும்.

அடுத்து… பணப்புழக்கம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x