Published : 30 Jun 2022 04:49 AM
Last Updated : 30 Jun 2022 04:49 AM
சென்னை: சிறு, குறு தொழில் முனைவோர்முன்னேற்றத்தில் முன்னுதாரணமான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம் தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் (MSME) தினத்தையொட்டி, எஸ்பிஐ வழங்கும் ‘இந்து தமிழ் திசை – கனவு மெய்ப்பட’ தொழில் முனைவோருக்கான திருவிழா கடந்த சென்னை, ரெசிடென்ஸி டவரில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்தும் ஏராளமான குறு, சிறு தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர்.
இத்திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கென ‘கனவு மெய்ப்பட...’ தொழில் திருவிழாவை பாரத ஸ்டேட் வங்கியும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்துவதற்கு எனது வாழ்த்துகள். இதில் பங்கேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையவும், தமிழ்நாட்டை மிகச்சிறந்த முதலீட்டு மையமாக உருவாக்குவதிலும், குறு, சிறு தொழில்நிறுவனங்களுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் முதல்வர் மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றி வருவதை அறிவீர்கள்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே புதிய தலைமுறை தொழில்முனைவோரை உருவாக்கும் நோக்கில் ‘டான்சிம்’ எனும் புத்தாக்க இயக்ககம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக கல்லூரிகளிலேயே மாணவர்கள் தொழில் முனைவோராக உருவாக ‘தொழில் வளர் காப்பகங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. இதில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கத் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும். இதற்காகப் பயிற்சிப் பட்டறை, கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு 2,377 முகாம்கள் நடத்தப்பட்டு 2,30,000 மாணவர்கள் தொழில் முனைவோராக உருவாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. 81 கல்லூரிகளில் தொழில்வளர் காப்பகங்கள் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு 9 காப்பகங்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வாங்க நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
'தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மிஷன்' என்றழைக்கப்படும் ‘டான்சிம்’ மூலமாக, தகுதியான புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. 50 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, முதல்கட்டமாக 19 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.95 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
22,000 பேருக்கு வேலைவாய்ப்பு
நடப்பு நிதியாண்டில் வளர்ந்துவரும் தொழில்களுக்கான ஆதார நிதி திட்டம் என்ற புதிய திட்டத்தை ரூ.5 கோடி மதிப்பில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனமேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்), வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்என 3 வகையான மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ரூ.171.24 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் 22 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பைப் பெறுவர்.
மேலும் 6 மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கம், ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் முன்னேற்றத்தில் முன்னுதாரணமான மாநிலமாக நமது தமிழகம் திகழ்கிறது. வேலை தேடுபவராக இல்லாமல் வேலை அளிப்பவர்களாகத் தமிழக இளைஞர்கள் மாறுவதற்கான அனைத்து செயல்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து தமிழக அரசின் தொழில்கள் மற்றும் வர்த்தகம் கூடுதல் இயக்குநர் (திட்டங்கள்) ஆர்.ஏகாம்பரம், சென்னை வட்டபாரத ஸ்டேட் வங்கி தலைமைப் பொது மேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணா, தமிழ்நாடு சிறு மற்றும்குறு தொழில்கள் சங்க (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் உரையாற்றினர்.
முன்னதாக, ‘இந்து தமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் பங்கேற்ற குறு, சிறு தொழில் முனைவோரின் பல்வேறு கேள்விகளுக்கு கருத்தாளர்கள் விளக்கங்களை அளித்தனர். ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நிகழ்வை நெறிப்படுத்தினார்.
இந்த விழாவை ஸ்ரீ காளீஸ்வரி ஃப்யர் ஒர்க்ஸ் மற்றும் குட்வில் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம் இணைந்து நடத்தின. மீடியா பார்ட்னராக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காணத் தவறவிட்டவர்கள் https://www.htamil.org/00743 என்ற லிங்கில் பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT