Last Updated : 30 Dec, 2023 12:36 PM

 

Published : 30 Dec 2023 12:36 PM
Last Updated : 30 Dec 2023 12:36 PM

Bigg Boss 7 Analysis: தினேஷின் பர்சனல் குறித்து அத்துமீறி பேசும் விசித்ரா!

முந்தைய சீசன்களோடு ஒப்பிடுகையில் இந்த சீசனின் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்தான் உப்புசப்பு இல்லாமல் இருக்கிறது என்று சொல்லலாம். கடந்த சீசனில் கூட உடலுக்கு வேலை கொடுக்கும் சில கடினமான டாஸ்க்குகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த சீசனிலோ எல்கேஜி பிள்ளைகளுக்கு கொடுக்கப்படும் ஆக்டிவிட்டி போன்ற டாஸ்க்குகலே அதிகம் இடம்பெற்றிருப்பது, ஏற்கெனவே சண்டையைத் தவிர வேறு எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் செல்லும் நிகழ்ச்சியை மேலும் தடுமாற வைக்கிறது. கடைசியாக நடந்த போர்ட் டாஸ்க் மட்டும் கொஞ்சம் பரவாயில்லை.

89ஆம் நாள் எபிசோடே பஞ்சாயத்துடன் தொடங்கியது. வெளியே தன்னுடைய தற்போதைய செல்லப் பிள்ளைகளான மாயா, பூர்ணிமாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த விசித்ராவை, சில பாத்திரங்கள் கழுவித் தருமாறு கேட்டார் ரவீனா. எல்லா வேலைகளையும் தன்மீதே சுமத்துகிறீர்கள் என்று கடிந்து கொண்ட விசித்ரா, உள்ளே வந்தும் பொரிந்து தள்ளினார். இத்தனைக்கும் ரவீனா அவரிடம் தன்மையாகவே வந்து பாத்திரங்களை கழுவச் சொல்லி கேட்டார். தான் பேசிக் கொண்டிருந்ததை தடுத்து வேலை கொடுத்த விரக்தியால் எரிந்து விழுந்து கொண்டிருந்தார் விசித்ரா.

அதோட நிற்காமல், பாத்திரத்தை கழுவிக் கொண்டே அங்கிருந்த ரவீனா, மணி, குறிப்பாக தினேஷ் மூவரையும் பற்றி, ‘இதுங்க மூஞ்சியெல்லாம் பார்க்கவே வெறுப்பா இருக்கு’ என்கிற ரீதியில் தொடங்கி முகத்தை கொடூரமாக வைத்துக் கொண்டு வசை பாடினார். அதிலும் தினேஷ் குறித்து அவர் பேசியதெல்லாம் உச்சகட்ட அநாகரீகம்.

சில நாட்களுக்கு முன்பே தினேஷின் பர்சனல் குறித்து பேசியிருந்த நிலையில், தற்போது அவர் ஒருபடி மேலே சென்று, கேமரா முன் நின்று தினேஷின் முன்னாள் மனைவியிடம் ’திரும்பி வந்துடாதேமா’ என்று விசித்ரா கூறியது மிக மோசமான செயல். போட்டியில் தினேஷிடம் இருக்கும் குறைகளை கூறுவதை விடுத்து, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது எவ்விதத்தில் நியாயம்?

அதிலும் மற்ற போட்டியாளர்களை விட வயதில் மூத்த விசித்ரா இப்படி பேசுவதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்த நூறு நாள் நிகழ்ச்சி ஒவ்வொரு போட்டியாளருக்கும் முடிந்து தனிப்பட்ட வாழ்க்கை உண்டு. அதுகுறித்து பேச உள்ளே இருக்கும் யாருக்கும் உரிமை இல்லை. இந்த வாரத்தில் மட்டும் இது இரண்டாவது முறையாக நடப்பதை கமல் நிச்சயம் வார இறுதியில் சுட்டிக் காட்டி கண்டிக்க வேண்டும்.

இந்த விஷயத்தை அரைகுறையாக காதில் வாங்கிய ரவீனா, சரியாக விசித்ரா சொன்ன அந்த ‘திரும்பி வந்துடாதேமா’ என்ற வார்த்தையை மட்டும் தினேஷிடம் சொல்லிவிட, அவரது முகத்தில் கோபம் கனலாய் எரிந்தது. அந்த நேரத்தில் கோபத்தை வார்த்தைகளாய் கொட்டியவர், அதுகுறித்து விசித்ராவிடம் நேரடியாக கேட்காமல் விட்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. இத்தனைக்கும் இந்த பாத்திரம் கழுவும் விவகாரத்தில் தினேஷுக்கும் விசித்ராவுக்கு நேரடியாக எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியும் மற்றவர்களை விடுத்து தினேஷை வம்பிழுத்தது விசித்ராவின் வன்மம் தவிர்த்து வேறென்னவாக இருக்க முடியும்?

பிறகு இந்த விவகாரம் வார இறுதியில் ஒரு பஞ்சாயத்தாக மாறிவிடக் கூடாது என்று நைஸாக ரவீனாவை தனியாக அழைத்து மன்னிப்பு கேட்டார். நியாயமாக அவர் தினேஷிடம் தான் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.

டிக்கெட் டு ஃபினாலேவின் ஒரு அங்கமாக மற்றொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் இருபுறமும் இரண்டு அட்டைகள் வைக்கப்பட்டிருக்கும். ஒருகையைக் கொண்டு அந்த அட்டையை பின்னால் இருக்கும் போர்டுடன் சேர்த்து பிடிக்க வேண்டும். இறுதிவரை யார் அட்டையை விடாமல் பிடித்திருக்கிறாரோ அவர்தான் இதில் வின்னர். கையை லேசாக விட்டு பிடித்ததாக முதலில் நிக்சன் வெளியேற்றப்பட்டார்.

அடுத்து 4 மணி நேரம் தாக்குப் பிடித்து நின்ற விசித்ரா அதன் பிறகு முடியாமல் விலகிக் கொண்டார். ஒரே பக்கத்தில் இருந்து நிக்சன், விசித்ரா இருவரும் வெளியேறியதால் தற்போது அந்த பக்கத்தில் மாயாவும் பூர்ணிமாவும் மட்டுமே போர்டை தாங்கிப் பிடித்தனர். அடுத்து, பூர்ணிமாவும் வெளியேறவே சிறிது நேரம் தாக்குப் பிடித்த மாயா, பின்னர் முடியாமல் போர்டை விட்டார்.

இந்த பக்கம் நின்ற விஷ்ணு, மணி, ரவீனா, தினேஷ் நால்வருமே, நீண்ட நேரம் விடாமல் தாக்குப் பிடித்தனர். ஒருகட்டத்தில் முதலில் தினேஷ், அவரைத் தொடர்ந்து விஷ்ணு, அடுத்து மணி என்று ஒவ்வொருவராக விட, இறுதியாக மீதி இருந்த ரவீனா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதுவும் கூட மணி வேண்டுமென்றே விட்டுக் கொடுத்தது போலத்தான் இருந்தார். அவர் நினைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நேரம் போட்டியில் நீடித்திருக்கலாம்.

இந்த சீசன் போட்டியாளர்களின் இதுபோன்ற செயல்கள்தான் டாஸ்க்குகளை சுவாரஸ்யமற்றதாக மாற்றிவிடுகின்றன. முந்தைய சீசன்களில் ஓரளவு சுவாரஸ்யமான மற்றும் உடலுக்கு கடுமையாக வேலை தரக்கூடிய டாஸ்க்குகள் தரப்பட்டன. ஆனால் இந்த சீசனில் கொடுக்கப்பட்ட சிறுபிள்ளைத் தனமான டாஸ்க்குளையே கூட இந்த போட்டியாளர்கள் சுவாரஸ்யம் ஏதுமின்றி அடுத்தவருக்காக விட்டுக் கொடுத்து விடும் போக்கு அதிகம் நடக்கிறது. இறுதிகட்டத்தில் நடக்கும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்குகளாவது ஓரளவு சுவாரஸ்யமாக ஆடுவார்கள் என்று பார்த்தால் இதிலும் அப்படியே தொடர்கிறது. வரும் வாரத்திலாவது டாஸ்க்குகள் கடுமையாகிறதா இல்லை இதே ‘லெமன் இன் தி ஸ்பூன்’, ‘மியூசிக்கல் சேர்’ பாணி போட்டிகளையே கொடுக்கிறார்களா என்று பார்க்கலாம்.

முந்தைய அத்தியாயம்: மீண்டும் தலையெடுத்த குரூப்பிசம்... எப்படி இருக்கப் போகிறது ‘டிக்கெட் டு ஃபினாலே’?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x