Last Updated : 27 Dec, 2023 03:16 PM

 

Published : 27 Dec 2023 03:16 PM
Last Updated : 27 Dec 2023 03:16 PM

Bigg Boss 7 Analysis: மீண்டும் தலையெடுத்த குரூப்பிசம்... எப்படி இருக்கப் போகிறது ‘டிக்கெட் டு ஃபினாலே’?

ஃபேமிலி ரவுண்ட், விக்ரமின் வெளியேற்றம் ஆகியவற்றுக்குப் பிறகு ஆட்டம் சற்றே சூடுபிடிக்க காரணம், இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள ‘டிக்கெட் டூ ஃபினாலே’ டாஸ்க். இன்னும் இரண்டு வாரங்களில் நிகழ்ச்சி முடிவுக்கு வரும் தருவாயில் பல ‘சம்பவங்களை’ எதிர்பார்க்கலாம்.

தன்னைத் தானே டைட்டில் வின்னர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு நாமினேஷனில் பல வாரங்களாக எஸ்கேப் ஆகிக் கொண்டே வந்த விக்ரம், ஒருவழியாக கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். அவருடைய வெளியேற்றம் ஒரு பூகம்பத்தையும் சேர்த்து உண்டாக்கியது. விக்ரமின் சகோதரி மாயா குறித்து சொன்ன விஷயங்களால் அவர் மாயாவிடமிருந்து விலகியது, மாயாவுக்கு கடும் மன உளைச்சலை தந்துவிட்டது. இதனால் விக்ரம் வெளியேறியபோது அவர் முகத்தில் காட்டிய அஷ்டகோணல்களை மற்ற போட்டியாளர்கள் ரசிக்கவில்லை. இதனால் நாமினேஷனில் பலவாரங்களாக தப்பிக் கொண்டே வந்த மாயா, இந்த வாரம் அதிக நாமினேஷன் வாக்குகளை பெற்று முதல் ஆளாக இருந்தார்.

சில வாரங்களாக குரூப்பிசம் எதுவும் இல்லாமல் இருந்த பிக்பாஸ் வீடு, இந்தச் சம்பவத்தால் மீண்டும் மாயா, பூர்ணிமா, விசித்ரா, நிக்சன் என ஒரு குரூப்பாகவும், விஷ்ணு, மணி, ரவீனா, தினேஷ் என ஒரு குரூப்பாகவும் பிரிந்துள்ளது. டிக்கெட் டூ ஃபினாலே போட்டியிலும் இந்த அது எதிரொலித்தது.

இந்த டாஸ்க்கில் இல்லாத அர்ச்சனா, விஜய் வர்மா இருவரும் நடுவர்களாக செயல்பட்டனர். ஆளுக்கு ஒரு தங்க முயல் தரப்படும். அதனை சுற்றி வெவ்வேறு வண்ணங்களால் ஆன கற்களால் சிறிய கோட்டை ஒன்று கட்டப்பட்டிருக்கும். பஸ்ஸர் அடித்ததும் ஒரு நிமிடத்தில் நடுவர்கள் தேர்வு செய்யும் போட்டியாளர்கள் மட்டும் ஓடிச் சென்று கோட்டையை கலைத்து தங்க முயலை எடுத்துக் கொண்டு தங்கள் இடத்தில் வந்து நிற்க வேண்டும். நேரம் முடிவதற்குள் வராதவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். கடைசியில் யாரிடம் அதிக முயல்கள் இருக்கிறதோ அவரே இந்தப் போட்டியில் வெற்றியாளர்.

இந்தப் போட்டியில் தான் ஜெயிப்பதை விட அடுத்தவர் தோற்க வேண்டும் என்று வன்மத்துடனே அனைவரும் விளையாடியதாகத் தெரிகிறது. இதனை முதலில் ஆரம்பித்து வைத்தவர் விசித்ரா. தான் தோற்றாலும் பரவாயில்லை, தினேஷ் போட்டியில் இருக்கக் கூடாது என்று ஓபனாக சொல்லியது, நல்ல போட்டியாளருக்கான மனநிலை அல்ல. இதனையடுத்து, அடுத்தடுத்து தோற்றவர்களும் தனக்கு பிடிக்காதவர்கள் ஜெயிக்க கூடாது என்பதிலேயே குறியாக இருந்தனர். அதிலும் முயலை பறிகொடுத்த பூர்ணிமா அதனை மணியிடம் கொடுக்கும்போது துப்பி கொடுத்தது எல்லாம் அருவருப்பாக இருந்தது.

சுற்றின் இறுதியில் மாயா, விஷ்ணு, மணி மூவரும் ஆடியதில் மாயா வெளியேற்றப்பட்டார். அதிக முயல்களை கைப்பற்றிய விஷ்ணு இந்த போட்டியில் வெற்றி பெற்றார். விஷ்ணுவின் வெற்றியை பூர்ணிமாவால் ஜீரணிக்கவே முடியவில்லை. தன்னுடைய வெற்றியை (விளையாட்டில்) தடுத்தவர் ஜெயித்துவிடவே கூடாது என்கிற மனித மனத்தின் உளவியலை தனது புலம்பல்களின் மூலம் அப்பட்டமாக பிரதிபலித்தார் பூர்ணிமா. ஆரம்பத்திலேயே தோற்ற தினேஷும் கூட தனக்கு வேண்டப்பட்ட மணிக்கு, ஓபனாக கமென்ட்ரி கொடுத்து உதவி செய்து கொண்டிருந்தார்.

இந்தப் போட்டிக்குப் பிறகு விசித்ராவும் அர்ச்சனாவும் நடித்துக் காட்டிய அந்த சீரியல் மாமியார் மருமகள் மைண்ட் வாய்ஸ் குபீர் சிரிப்பை வரவழைத்தது. எந்நேரமும் ஸ்ட்ராட்டஜி, வன்மம் என்றே சென்று கொண்டிருக்கும் இந்த சீசனில் அவ்வப்போது இதுபோன்ற விஷயங்களே சற்று ஆறுதல். ஒப்பீட்டளவில் மற்ற சீசன்களை விட இந்த சீசனில் இது போன்ற விஷயங்கள் குறைவு.

இதனையடுத்து, தினேஷின் பர்சனல் குறித்து அவரின் முதுகுக்குப் பின்னால் அத்துமீறி பேசிய விசித்ரா, தனது தரத்தை குறைத்துக் கொண்டதாக தெரிகிறது. தினேஷிடம் சொல்வதற்கு ஏராளமான குறைகள் இருக்க, அதை சொல்லியிருக்கலாம். ஆனால், அதைவிடுத்து இந்த நிகழ்ச்சிக்கு வெளியே அவருக்கு இருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று.

ஆட்கள் குறைந்து ஆட்டத்தின் போக்கு கடுமை ஆக ஆக, போட்டியாளர்களின் சுயம் இன்னும் அப்பட்டமாக வெளிப்படக் கூடும். இந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நாமினேஷனில் இருப்பவர்களின் தலையெழுத்தைக் கூட மாற்றலாம். இறுதி வாரங்களில், குரூப்பிசங்களில் சிக்காமல் ஆட்டத்தை சரியான திசையில் ஆடி மக்கள் மனங்களை வென்று இறுதி மேடையை அலங்கரிக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x