Last Updated : 18 Dec, 2023 02:17 PM

 

Published : 18 Dec 2023 02:17 PM
Last Updated : 18 Dec 2023 02:17 PM

Bigg Boss 7 Analysis: அத்துமீறும் கேலியும்... சுட்டிக்காட்டியும்  உணர்ந்து கொள்ளாத விக்ரமும்!

பலவாரங்களாக பிக்பாஸ் வீட்டில் நடந்துகொண்டிருந்த ஒரு பிரச்சினையை ஒருவழியாக கமல் சற்று அழுத்தமாகவே சுட்டிக் காட்டியிருந்தார். விக்ரம் குறித்து மற்ற போட்டியாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்வைக்கும் கேலி, கிண்டல்கள் குறித்து ஞாயிறு எபிசோடில் பெயர்களை குறிப்பிட்டே கமல் கேள்வி எழுப்பினார். ஆனால் அதன்பிறகும் கூட விக்ரம் அதை உணர்ந்து கொள்ளாமல் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கே சப்பைக் கட்டு கட்டியதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

சனிக்கிழமை எபிசோடில் கூல் சுரேஷை பேக் செய்து அனுப்பிவிட்டதால் ஞாயிறு எபிசோடில் எலிமினேஷன் எதுவும் இல்லை. வழக்கமாக எலிமினேஷன் படலமே ஒரு அரை மணி நேரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதால், இந்த வாரம் அதனை சமன்செய்யும் வகையில், மணியின் கேப்டன்சி குறித்து கருத்து கேட்ட பிறகு ஒரு நீண்ட டாஸ்க்கை போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்தார்.

வாரம் முழுக்க பெரியளவில் சச்சரவுகள் இல்லாததால் மணியின் கேப்டன்சியிலும் பெரியளவில் பிரச்சினைகள் எதுவும் இல்லை. போட்டியாளர்களுமே கூட இதையே முன்மொழிந்தனர். இந்த சீசனில் எந்தவித புகாருக்கும் ஆளாகாத ஒரே கேப்டன் மணியாகத்தான் இருக்க முடியும்.

இதனையடுத்து அன்பு, சுயநலம், அதிர்ஷ்டம், விடாமுயற்சி, திறமை, சகிப்புத் தன்மை ஆகிய வார்த்தைகள் ஒட்டப்பட்ட ஒரு சுழலும் அட்டை கொண்டு வரப்பட்டது. அதில் இருக்கும் ஒவ்வொரு குணாதிசயமும் தனக்கு எத்தனை சதவீதம் இருக்கிறது என்று கூறி, இன்னொரு போட்டியாளருக்கும் அதனை கூற வேண்டும். இந்த நீண்ட டாஸ்க்கில் யார் யாருக்கு யாரை கோர்த்து விட்டால் ஆட்டம் சூடுபிடிக்கும் என்று கணித்து அதற்கான நபர்களை தேர்வு செய்தார் கமல். அர்ச்சனாவுக்கு பூர்ணிமா, மாயாவுக்கு தினேஷ், பூர்ணிமாவுக்கு விஷ்ணு, விஷ்ணுவுக்கு மாயா என ஒவ்வொருவரையாக அழைத்து பேசச் செய்தார்.

ஜாலியான விஷயங்கள் எல்லாம் முடிந்து சீரியஸான டாபிக் ஒன்றை கையில் எடுத்தார் கமல். இது இந்த சீசன் தொடங்கியது முதலே நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம். ஏற்கெனவே ஓரிரு முறை மேம்போக்காக சுட்டிக் காட்டியிருந்தாலும் இந்த முறை சற்று கடினமாகவே அதை இடித்துரைத்தார். விக்ரம் குறித்து ‘கரப்பான்பூச்சி’, ‘பருத்தி மூட்டை’ என்று அவரது முகத்துக்கு நேராகவும், அவர் இல்லாதபோதும் மற்றவர்கள் பேசுவது குறித்த் குற்றச்சாட்டை கமல் முன்வைத்தார். இந்த வாரம் அப்படி பேசிய மாயாவை எழுப்பி அவர் கேட்டபோது, தனது வழக்கமான ஆயுதமான மன்னிப்பை எடுத்து வெளியே வீசினார் மாயா. அப்படியான கேலி, கிண்டல்கள் குறித்து மாயாவுக்கு கமல் டோஸ் விட்டுக் கொண்டிருந்த போதும் கூட, ‘அமுல்பேபியை அடிக்காதீங்க’ என்கிற ரீதியில் மாயாவுக்கு சப்பைக் கட்டு கட்டினார் விக்ரம். அவர்கள் கிண்டல் செய்வது தன்னைத்தான் என்ற புரிதல் கூட இல்லாத அப்பாவியா அவர் என்று விளங்கவில்லை.

வழக்கம்போல சிரித்து மழுப்பப் பார்த்த பூர்ணிமாவையும்கூட ‘சிரிக்காதீங்க’ என்று ஆஃப் செய்து இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை குறையாமல் பார்த்துக் கொண்டார் கமல். அவர்கள் உங்களை கிண்டல் செய்யும்போது அதை தடுக்காமல் இருந்தால் அதையே உங்கள் வாழ்க்கை முழுக்க முத்திரை குத்திவிடுவார்கள் என்று கமல் கூறியது முகத்தில் அறையும் உண்மை. ஆனால் அவ்வளவு பேச்சையும் தஞ்சாவூர் பொம்மை போல தலையை ஆட்டி ஆட்டி கேட்ட விக்ரம். வெளியே வந்து ‘என்னைப் பற்றி அப்படி பேசினீர்களா?’ என்று கூட சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று கேட்கவில்லை. மாறாக மாயா, பூர்ணிமா உள்ளிட்டோரிடம் சென்று இவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். ஒருவேளை விக்ரமின் இயல்பே யார் வம்புதும்புக்கும் போகாத வடிவேலுவின் கேரக்டராக இருக்கலாம். ஆனால் தன்னை நேரடியாக பாதிக்கும் விஷயங்களுக்குக் கூட குரல் கொடுக்காமல் இருப்பது கூட நியாயமில்லை. தன்னை ‘டைட்டில் வின்னர்’ என்று கண்ணாடியை பார்த்து சொல்லிக் கொள்வது மட்டுமே வெற்றியைத் தேடித் தந்துவிடாது என்பதை எஞ்சியிருக்கும் சில நாட்களிலாவது அவர் புரிந்து கொள்வாரா என்று பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x