Published : 07 Apr 2022 05:51 AM
Last Updated : 07 Apr 2022 05:51 AM

மேஷம், ரிஷப ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

ராசியில் ராகு - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 13-04-2022 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற் படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு புத்திக் கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: திருத்தணி முருகனை அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
****************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)
ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சுக்ரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன. 13-04-2022 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச் சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
*****************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x