Published : 03 Jan 2014 00:00 am

Updated : 06 Jun 2017 17:29 pm

 

Published : 03 Jan 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2017 05:29 PM

சஞ்சய் சுப்ரமணியம் - சங்கீதத்தின் சொத்து

சாதகமே சங்கீத சொத்து சஞ்சய்க்கு அசுர சாதகம்; அபார ஞானம்; சங்கீதத்தின் மேல் இருக்கும் தீராத காதல்; கலையின் மேல் முழு ஈடுபாடு; முழு மூச்சுடன் தீர்மானமாய் அதில் இறங்குவதற்கான தன்னம்பிக்கை; ஒவ்வொரு இசை மேதையும் தன்னிடம் இருக்கும் அத்தனை ஞானத்தையும் ஒருசேர இவருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டாரோ என்று வியப்புறும் வண்ணம் அமைந்திருந்தது அவருடைய அகாடமி கச்சேரி.

பாஞ்சஜன்யத்தை ஊதி நாட்டையில் ‘பல்லாண்டு பல்லாண்டு’ பாடிக் கச்சேரியைத் தொடங்கினார். அங்கு ஆரம்பித்து அவர் கடைசியாகப் பாடிய பாரதிதாசன் பாடல்வரை சிறிதுகூடத் தொய்வில்லாமல் கச்சேரியை நடத்திச் சென்றார். தேவகாந்தாரி ராகத்தில் ‘க்ஷதிஜா ரமணம்’ என்ற கிருதியை நேர்த்தியாகப் பாடி, மஹா வைத்யநாத ஐயரால் பிரபலமடைந்த ஹம்சத்வனி ராகத்தை மிகச் சிறப்பாக வழங்கினார். விளம்ப காலமாகப் பாடினாலும், வேகமாகப் பாடினாலும் விவேகத்துடன் பாடினார். ஒவ்வொரு சங்கதியும் ராம பாணம் போல் துல்லியமாக விழுந்தது. பட்டணம் சுப்பிரமண்ய ஐயரின் ‘மரசேதி ந்யாயமா ராமா’ கிருதியைப் பாடினார். வராளி ராகத்தை விஸ்தாரமாகத் தீட்டீனார். அவர் ஷட்ஜத்தில் நின்று பாடியபோது பிருங்க நாதமாக ரீங்காரித்தது.


தியாகய்யரின் ‘ஏடி ஜன்மமிதி’ கிருதி, விவாதி ராகமான வாகதீஸ்வரி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டது. மீண்டும் தியாகய்யரின் ‘பரந்தாமவதி யுவதி’. ஹுஸேனி ராகத்தில் நேற்றந்தி நேரத்திலே சுப்பராயரின் பதம்; பதறாத காரியம் சிதறாது என்பார்கள். சாவேரி ராகத்தை சாறாய்ப் பிழிந்து கொடுத்துவிட்டு, தானம் பாடி, ‘வரட்டும் வரட்டும் பதறாதிரு மனமே’ என்ற பல்லவியைத் தெளிவாக வழங்கினார். ராகமாலிகாவாக ஹிந்தோளம், கன்னட, காம்போஜி முதலிய ராகங்களில் ஸ்வரப் பிரஸ்தாரம் செய்தார்.

வரதராஜன் வயலினில் மிகத் திறமையாக நிழல் போல் தொடர்ந்து, ராகம் வாசிக்கும்போது தன் மனோதர்மத்தை வெளிக்காட்டக் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டார். நல்ல வித்வத். மிருதங்கத்தில் முருகபூபதியும், கஞ்சீராவில் வெங்கட்ராமனும் கச்சேரிக்கு மேலும் மெருகூட்டி வாசித்தனர். தனி வாசிக்கும்போது தங்களுடைய மனோதர்மத்தை அசாத்யமாக வெளிக்காட்டினர்.

காபி ராகத்தில் ‘ஏமந்துநே முத்து பாலாமணி’ என்ற தர்மபுரீஸ்வரின் காபி ராக ஜாவளியைப் பாடி ‘பாரிலே உயர்ந்த நிலம்’ என்று ஆரம்பித்த வரிகளை மோஹனம், ஆனந்த பைரவி, பெஹாக், சிந்து பைரவி முதலிய ராகங்களில் பாடி, பாரதிதாசனின் ‘என் தாய் வாழ் எனும் மந்திர நாதம்’ பாடலை உள்ளம் உருகிப் பாடிக் கச்சேரியை முடித்தார். எழுந்துகொள்ள மனமில்லாமல் ரசிகர்கள் கலைந்தனர். கர்னாடக சங்கீதத்திற்குப் பெருமை சேர்க்கும் கலைஞர் இவர்.

பாட்டு : சஞ்சய் சுப்பிரமண்யம்

வயலின்: வரதராஜன்

மிருதங்கம்: முருகபூபதி

கஞ்சீரா: வெங்கட்ராமன்

நாள்: 24.12.2013

சபா: மியூஸிக் அகாடமி,

இரவு 7 மணி


பாஞ்சஜன்யம்சங்கீத சொத்துஏமந்துநே முத்து பாலாமணிகலை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x