Published on : 29 Apr 2023 15:12 pm

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரியங்கா காந்தி நேரில் ஆதரவு - போட்டோ ஸ்டோரி

Published on : 29 Apr 2023 15:12 pm

1 / 15

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திவரும் மல்யுத்த வீராங்கனைகளை பிரிங்கா காந்தி இன்று (சனிக்கிழமை) சந்தித்து ஆதரவு தெரிவித்தார். | படங்கள்: ஷிவ் குமார் புஷ்பகர்

2 / 15

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவித்தார்.

3 / 15

தொடர்ந்து அவர்களுடன் உரையாடி தகவல்களைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா கூறுகையில், "இந்தப் பெண்கள் நாட்டிற்காக பதக்கங்கள் வாங்கிய போது, அவர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக நாம் அவர்களைக் கொண்டாடினோம்.

4 / 15

தாங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அவர்கள் போராடும் போது, அவர்களின் வலியை கேட்க யாரும் தயாராக இல்லை. அவர்களைக் குறை கூறவும் செய்கிறோம். உண்மையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் நகலை வீரர்களுக்கு வழங்க வேண்டும்.

5 / 15

அந்த நபர் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவர் முதலில் பதவி விலக வேண்டும். அவர் தொடர்ந்து அந்த பதவியில் இருக்கும் வரை, வீரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களின் வாய்ப்புகளை அழிக்க முடியும். இந்தநிலையில் வழக்குப்பதிவு, விசாரணைக்களுக்கு எல்லாம் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

6 / 15

எனக்கு பிரதமரிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மையில் இந்த வீராங்கனைகள் மீது அவருக்கு அக்கறை இருந்திருந்தால், பிரதமர் இவர்களை அழைத்துப் பேசியிருப்பார். இவர்கள் பதக்கங்கள் வெல்லும் போது இவர்களை பிரதமர் தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். அதனால் அவர்களை அழைத்து பேசுங்கள். அவர்கள் நமது பெண்கள்.

7 / 15

குற்றம்சாட்டப்பட்டவரை காப்பாற்ற ஏன் இவ்வளவு முயற்சிகள் எடுக்கப்படுகின்றது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த பெண்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் நிறைய செய்திருக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் அவர்கள் (அரசு) அந்த மனிதரைப் பாதுகாக்கிறார்கள். நம் பெண்களை நாம் காப்பாற்ற முடியவில்லை என்றால் நாட்டை பற்றி என்னவென்று சொல்வது" என்றார் பிரியங்கா காந்தி

8 / 15

மேலும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய குழு பற்றி கூறுகையில், "விசாரணைக் குழுக்கள் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் பிரச்சினையை தணிக்கவே செய்வார்கள். பெண்கள் ஒடுக்கப்படும் போது எல்லாம் இந்த அரசாங்கம் மவுனமாகவே இருக்கிறது.

9 / 15

பிரதமர் ஒத்துக்கொள்கிறாரோ இல்லையோ, அவரது அமைச்சர்கள் ஒத்துக்கொள்கிறார்களோ இல்லையோ, அரசு ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ, ஒட்டுமொத்த நாடும் இந்த பெண்களுடன் நிற்கிறது. அரசு அந்த மனிதரை( பிரிஜ் பூஷன்) காப்பாற்ற விரும்புகிறது. நான் இந்த பெண்களை நினைத்து பெருமைப்படுகிறேன். நாம் அனைவரும் இவர்களுடன் நிற்க வேண்டும்" என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

10 / 15

இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர்கள் பூபேந்திர ஹூடா, தீபேந்திர ஹூடா, உதித் ராஜ் போன்றோரும் வீராங்கனைகளைச் சந்தித்து தங்களின் ஆதரவினைத் தெரிவித்தனர்.

11 / 15

முன்னதாக, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12 / 15

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது.

13 / 15

எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

14 / 15

இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் மனுவினை விசாரித்த நீதிமன்றம் பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியது.

15 / 15

அதனைத் தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீஸார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Recently Added

More From This Category

x