

கமல் ஹாசனின் ‘மகாநதி’ திரைப்படம் குறித்து ஒருமுறை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தேன். அப்போது அழைத்திருந்த ஒரு மூத்த நண்பர், ‘மகாநதி படம் வந்தபோது நான் கல்லூரி மாணவன். என் நண்பர்களிடத்தில் கூறினேன்... இந்தப் படம் எப்படி போகுமெனத் தெரியாது. ஆனால், இப்போது பால்யத்தில் இருக்கும் தலைமுறை முப்பது வருடங்கள் கழித்து இந்தப் படத்தை கொண்டாடுவார்கள்’ என்று கூறினேன் என நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார் நண்பர்.
பல நாட்கள் கழித்து திடீரென அந்த உரையாடல் நினைவில் எழ, மீண்டும் ‘மகாநதி’ பார்த்தேன். ஏற்கெனவே பார்த்த படம்தான் என்றாலும், இம்முறை பல புதியத் திறப்புகளை ஏற்படுத்தியது படம். தன் வாழ்வை சீரழித்த பிம்ப் தனுஷை மட்டும் கொன்றிருந்தால், காவேரிக்கு மட்டும் தகப்பனாக இருந்திருப்பார் கிருஷ்ணா.
சோனாகாச்சி பாலியல் விடுதியில் தன் மகளை தேடுகிறார் கிருஷ்ணா. தன் மகள் வயதையொத்த பல மகள்களை அங்கு காண்கிறார். தன் மகளை மீட்டு மார்போடு அணைத்திருக்கும் கிருஷ்ணாவை, பிம்ப்புகள் தாக்குகிறார்கள், இதர பாலியல் தொழிலாளிகள் பிம்ப்புகளை தடுத்து கிருஷ்ணாவையும், காவேரியையும் பாதுகாக்கிறார்கள்.
ஒரு மூத்த பாலியல் தொழிலாளியின் மகள், கிருஷ்ணாவுக்கு குங்குமம் வைத்து முத்தமிட்டு, காவேரியை மீட்டு அழைத்து போவதற்காக ‘தேங்க்ஸ் அப்பா’ என்கிறாள். பாலியல் தொழிலாளியின் மகள் முத்தமிட்ட அத்தருணத்தில், அந்தோ சோனாகாச்சியின் அத்துனை மகள்களுக்கும் தகப்பனாகி விட்டார் கிருஷ்ணா!
ஒரு கலையின் வெற்றி, அது வழங்கும் மானுட தரிசனத்தில் இருக்கிறது. பாலியல் விடுதியில் சீரழியும் அத்துனை மகள்களுக்கும் தகப்பனாக ஒரு மனிதன் பரிணமித்த அற்புதமான தரிசனத்தை நிகழ்த்தி, தந்தைமையின் அதி அற்புதமான எல்லையைத் தொட்ட படைப்பு ‘மகாநதி’. பிள்ளைக் கறி தின்னும் வெங்கடாஜலத்தை வேட்டையாட தயாராயிருக்கிறார் கிருஷ்ணா. ‘உன் வாழ்வை சீரழித்தவன் தனுஷ் தான், எனக்கு ஒண்ணும் தெரியாது’ என்கிறான் வெங்கடாஜலம்.
கதற கதற வெங்கடாஜலத்தை வேட்டையாடுகிறார் கிருஷ்ணா. தன் ஒரு கையை இழந்து அவனை கொல்கிறார் கிருஷ்ணா. ‘மகாநதி’ திரை எழுத்தின் பல்வேறு சிறப்பம்சங்களுள் ஒன்று... அம்மா ஸ்தானத்திற்கு நகர்ந்து விட்ட மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையிலான அன்பு. அதேபோல நண்பர்களாக இருந்து மாமனார், மருமகன் ஆகிவிட்ட பஞ்சாபகேசனுக்கும், கிருஷ்ணாவுக்குமான உறவு.
மகாநதி பிரதானமாக எதை பேசுகிறது?
நேர்மை என்பது பிழைப்புக்கு எதிரானதாக ஆக்கப்பட்டிருக்கும், நவீனம் மினுங்கும் தந்திர பூமியின் இருண்ட பக்கங்களை காத்திரமாக பதிவு செய்கிறது ‘மகாநதி’. ஏமாற்றுகாரர்களும், பிம்ப்புகளும் அதிகாரம் படைத்தவர்களாக வலம் வர, நேர்மையை பழகும் கிருஷ்ணாவை அந்த நேர்மைக்காகவே சிறைச்சாலை அனுப்புகிறது தந்திர பூமி.
மறுபுறம் தெருவில் கூத்தாடும் ஏழைக் கலைஞர்கள், பாலியல் தொழிலாளர்கள் என விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மனிதர்களும், போலீஸ் கான்ஸ்டபிள் முத்துசாமி, செவிலியர் யமுனா என சாதாரண மனிதர்களும் நியாயத்தின் பக்கம் நின்று நல்லவனுக்கு தோள் கொடுப்பார்கள்.
ஆம், உலகம் முழுவதும் தந்திர பூமியின் அனைத்து குரூரங்களுக்கும், அதிகாரங்களின் போர் வெறிகளுக்கும், ஆயுதங்களின் அடக்குமுறைகளுக்கும் எதிராக. எளிய மனிதர்களின் மனிதம் ஆங்காங்கே மலர்ந்துக் கொண்டேயிருப்பதுதான் இப்பூமியை உயிர்திருக்க வைத்திருக்கிறது.
‘மகாநதி’ தமிழின் சிறந்த சிறைச்சாலை படமும் கூட. இந்திய ஹீரோக்கள் ஜெயில் கம்பிகளை சுண்டு விரலால் வளைத்து, ஜெயில் சுவற்றை வீட்டு காம்பவுண்ட் சுவர் போல எகிறி குதித்து விளையாடிக் கொண்டிருக்க, ஜெயிலின் அசல் முகத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக பதிவு செய்த முதல் தமிழ் படம் ‘மகாநதி’ என்றால் மிகையல்ல.
சிறைச்சாலை என்பது அதிகார துஷ்பிரயோகம், பல்வேறு குற்றங்கள், ஊழல், அடாவடிகள் மலிந்த ஓர் அவலக் கூடம் என்பதை ரத்தமும், சதையுமாக பதிவு செய்தது ‘மகாநதி’. பூப்பெய்திய மகளை சிறைக் கம்பிகளுக்கு பின்னாலிருந்து தந்தை தரிசிக்கும் அந்தக் காட்சி... இன்னும் எத்தனை பத்தாண்டுகள் ஆனாலும் இந்திய சினிமாவின் சிறந்த காட்சிகளில் ஒன்றாக இருக்கும்.
சிறையிலிருந்து விடுதலையான தந்தை, இப்போது அதே மகளை பாலியல் விடுதியில் அவலமான கோலத்தில் காண்பார். பின்னர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட மகள் உறங்கிக் கொண்டிருக்கும்போது தூக்கத்தில் உளறுவாள். மகள் தன் தூக்கத்தில் பால்ய மழலையோடு உளறுவதை ரசித்திருந்த தந்தை, இப்போது... அதே மகள் தூக்கத்தில் தன் பாலியல் விடுதி வலிகளை வெளிப்படுத்துவதை காண்பார். பாச மகளை ஒரு தந்தை காணும் இந்த மூன்றுத் தருணங்களும் உலகின் எந்த மனிதனும் சந்திக்கக் கூடாத துயரம்.
அதிகாரத் தரகர்களின் சூழ்ச்சியில் சிக்கி, பாலியல் விடுதி, சிறைச்சாலை என தந்திர பூமியின் அவல பிரதேசங்களுக்குள் தொலைந்து போன அழகிய குருவிகளின் கதைதான் ‘மகாநதி’. அதிகாரப் பருந்துகளால் ஓட ஓட விரட்டப்பட்ட அந்த அப்பாவி குருவி, இறுதியில் கழுகாக மாறி பிள்ளைக்கறி தின்னும் விஷப் பருந்தை வேட்டையாடுகிறது.
கிருஷ்ணா தந்திர பூமியால் தனது அமைதியான, அழகிய வாழ்க்கையை இழந்திருந்தாலும் தன் கரத்தை இழந்து, பாதிக்கப்படும் பல குழந்தைகளின் பாதுகாப்புக்கு கரம் கொடுத்து, தந்தையுமானவனாக கம்பீரமாக நடைபோடுகிறார். வேடிக்கை மனிதர்களைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!
- அருண் பகத், சுயாதீன இயக்குநர் - ஏகலைவன், தி டைம் ப்ரொப்பெல்லர்