ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

மத்திய கிழக்கு பதற்றம் தொடங்கி இரு வார காலம் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்க பங்குச் சந்தைகள் வரலாறு காணாத சரிவு, ஐரோப்பியா முதல் ஆசிய நாடுகள் வரை எரிபொருள் தட்டுப்பாடு என்று அதிர்வலைகள் கடுமையாக எதிரொலிக்கின்றன. இந்தச் சூழலில் ஈரான் ராணுவத்தின் மூத்த கமாண்டர்களுள் ஒருவர் அண்மையில் அரசு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், “அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் ஈரானை நொறுக்கிவிடலாம் என ஒரு குறுகிய காலப் போரை நடத்தும் திட்டத்தோடு இறங்கினர். இன்று ட்ரம்ப்பும், நெதன்யாகுவும் திணறிப் போயுள்ளனர். அவர்கள் திட்டமிட்ட குறுகிய போர் இப்போது நீண்ட கால போராக மாறியுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ஈரான் போரை இனியும் சமாளிக்க அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஆயுதங்கள், வீரர்கள், இதைத் தாக்குப் பிடிக்கக் கூடிய முன் கணிப்புகளைக் கொண்ட போர் உத்தி திட்டங்கள் வேண்டும். ஆனால், அவை அவர்களிடம் இல்லை. இதற்கிடையில், இப்போதே சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நீள்வதற்கு மற்ற உலக நாடுகள் அனுமதிக்காது. அதுவே போருக்காக அலையும் ட்ரம்ப்புக்கு முட்டுக்கட்டையாக உருவாகும்.

கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 80 டாலரை தொடும் என்று நினைத்தனர். ஆனால் அது 160 டாலர் வரை செல்லக்கூடும். இனியும் ட்ரம்ப்பால் அவரது போர் வெறியை நீட்டிக்க முடியாது” என்று கூறியுள்ளார் ஈரான் ராணுவ மூத்த கமாண்டர். ஏற்கெனவே, இன்னும் 6 மாதங்கள் வரை இந்தப் போரை நீட்டிக்க தங்களிடம் பலம் இருப்பதாக ஈரான் கூறியிருந்ததும் இங்கே நினைவுகூரத்தக்கது.

ஆனால், ஈரானில் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு, அந்நாட்டை ஸ்தம்பிக்கச் செய்துள்ளதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிவித்து வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, இந்தப் போரை முன்னெடுத்ததால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புக்கு டேமேஜ் கன்ட்ரோல் நடவடிக்கைகளையும் ட்ரம்ப் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்.

‘இராக் போரின்போது அங்கு ஆட்சியில் இருந்த பாத் கட்சியின் அரசை கலைப்பதாகவும், இராக் ராணுவத்தை கலைப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனால் ராணுவத்தில் இருந்த 4 லட்சம் வீரர்கள் ஆயுதங்களோடு சென்றது மட்டுமே மிச்சம். அதற்கு அமெரிக்கா கொடுத்த விலை அதிகம். இப்போது ஈரானில் அணு ஆயுதங்களை அழிப்பதுதான் அமெரிக்காவின் நோக்கம் என்றால் 2025 செப்டம்பரில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் இன்னமும் ஈரானில் குவியல் குவியாக ஆயுதங்கள் எங்கிருந்து வருகின்றன?

அமெரிக்காவுக்கு இது நடக்க வேண்டும், அது மாற வேண்டும் என்ற விருப்பம்தான் இருக்கிறதே தவிர, திட்டம் என்று எதுவும் இல்லை. ஒருவேளை பிராந்திய அமைதிக்காக ஈரான் மீது தாக்குதல் என்று அமெரிக்கா சப்பைக் கட்டு கட்டினால், ஒவ்வொரு முறையும் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படும் போதும், அது பரவலான பிராந்திய பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்?

அழிவைத் தாண்டி வேறேதும் திட்டமில்லாத அமெரிக்கா இவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லுமா?’ என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்தச் சூழலில்தான், “ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும். ஏனெனில், ஈரானில் அமெரிக்க ராணுவம் குறிவைத்து குண்டுவீசி அழிப்பதற்கு என்று எதுவும் இல்லை. எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர நான் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார் ட்ரம்ப். ஆனால், “இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு என்று எதுவும் இல்லை. தேவைப்படும் வரை ஆபரேஷன் தொடரும்” என்கிறது இஸ்ரேல். இந்த நிலைப்பாடுகளை ஈரான் எவ்வாறு அணுகும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஈரானின் இலக்கு இனி அமெரிக்க ஆதரவு பொருளாதார மையங்கள் / அமைப்புகள், வங்கிகள் என்பதை மட்டும் அந்நாடு தெளிவுபடுத்தி எச்சரித்துள்ளது.

“கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டாலராக உயர வேண்டும் என்பதே ஈரானின் இலக்கு. F-35 ஏவுகணையை வீழ்த்துவதைவிட இந்த எண்ணெய் விலை ஏற்றத்தைத்தான் ஈரான் வெற்றியாகக் கருதுகிறது. இது உலகப் பொருளாதாரத்துக்கு சிக்கலைத் தரும். வேதனையுடன் நாடுகள் ட்ரம்ப்பை நச்சரிக்கும். உலகின் மொத்த எண்ணெய் வணிகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீர்நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது ஈரான்.

எண்ணெய் பைப்லைன்கள், கிடங்குகள், சரக்கு முனையங்கள் என மிகவும் துல்லியமாக திட்டமிட்டு ஈரான் தாக்குதல் நடத்திவருகிறது. அவர்கள் பல ஆண்டு காலமாக இதுமாதிரியான ஒரு போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எண்ணெய் வர்த்தகம் பாதித்தால் விலை எகிறும். விலை உயர்ந்தால் இந்த உலகம் அலறும். கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 அமெரிக்க டாலர் என்ற நிலை எட்டும்போது ஈரான் அதை தனது போர் வெற்றியாகக் கொள்ளும். ஈரானின் போர் உத்தி ஏவுகணை அல்ல, எண்ணெய் விலை” என்று கூறுகிறார் ‘Rich Dad Poor Dad’ என்ற உலகின் பெஸ்ட் செல்லர் நூலை எழுதிய ராபர்ட் கியோஸகி.

ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை
ஈரான் போர் ‘கணக்கு’ - சீனாவுக்கு லாபமா, நஷ்டமா?

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in