Published : 03 Apr 2023 07:50 AM
Last Updated : 03 Apr 2023 07:50 AM

பாகிஸ்தானில் தீவிரமடையும் உணவுத் தட்டுப்பாடு: இலவச கோதுமை வாங்க குவிந்த மக்கள் நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்

கராச்சி: பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடன் சுமை அதிகரித்துள்ளதால், அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. இதனால், உணவு, மருந்து உட்பட அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் அந்நாடு உள்ளது. இதனால், அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது. பால், காய்கறி, சமையல் எரிவாயு, பெட்ரோல் விலை உச்சம் தொட்டுள்ளது. மக்கள் உணவு வாங்கபணம் இல்லாமல் திணறி வருகின்றனர். தற்போது ரமலான் மாதம் என்பதால் உலகெங்கும் முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றனர். இதை முன்னிட்டு பாகிஸ்தான் அரசும் சில தொண்டு நிறுவனங்களும் மக்களுக்கு இலவசமாக கோதுமை விநியோகித்து வருகின்றன. இலவச கோதுமையை வாங்க மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

இவை முறையாகவும் விநியோகிக்கப்படுவதில்லை. பல இடங்களில் இலவச உணவுகளை வாங்க மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இந்நிலையில், கராச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலவச கோதுமை பெறுவதற்கான கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் பெண்கள்.காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்குவதாக சிந்து மகாண முதல்வர் சையத் முராத் அலி ஷா அறிவித்துள்ளார்.

மக்கள் போராட்டம்

உணவுத் தட்டுப்பாடு தீவிர மடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசு ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்கள் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் வெறும் கையோடு வீடு திரும்புகின்றனர்.

தற்போது உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்ந்த ரொட்டித் துண்டுகளைக் கொண்டும் தண்ணீரைப் பருகியும் நோன்பு திறப்பதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x