Published : 31 Dec 2022 11:46 AM
Last Updated : 31 Dec 2022 11:46 AM
நிகோசியா: "பயங்கரவாததின் மூலம் இந்தியாவை ஒரு போதும் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது" என்று அண்டை நாடுகளுக்கு மறைமுகமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.
சைப்ரஸ் நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர்களின் பயங்கரவாத செயல்களைக் கண்டித்தார். கலந்துரையாடல்களின் போது அமைச்சர் பேசியதாவது: "பயங்கரவாதத்தின் மூலமாக யாரும் இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த முடியாது. அதனை நாம் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இந்தியா அனைவருடனும் சுமூகமான உறவைப் பேணுவதற்கே விரும்புகிறது. ஆனால் அதற்காக, சுமூகமான உறவு என்பதற்கு மன்னித்துக் கொண்டே இருப்பது அல்லது விலகி நின்று பயங்கரவாதத்தை வேடிக்கை பார்ப்பது என்று அர்த்தம் கிடையாது. இதில் இந்தியா தெளிவாக உள்ளது.
இரண்டாவது, நிச்சயமாக நமது எல்லைகள். நமது எல்லைப் பகுதிகளில் சில பிரச்சினைகள் உள்ளன. கரோனா காலக்கட்டத்தில் எல்லைப் பிரச்சினைகள் கொஞ்சம் அதிகரித்துவிட்டன. எல்லை விவகாரத்தில் இந்தியா - சீனா உறவு சுமுகமாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். தன்னிச்சையாக எல்லைக் கட்டுப்பாடு கோட்டை மாற்றி அமைப்பதற்கு இந்தியா உடன்பட வில்லை என்பதால் அதில் சிக்கல் உருவாகி இருக்கிறது. வெளியுறவுக் கொள்கை, தேசப் பாதுகாப்பு ஆகியவை குறித்து யோசிக்கும் போது, அரசின் ராஜதந்திரம், வெளியுறவுக் கொள்கைகள் பற்றி சில விஷயங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஏனெனில் நான் தான் வெளியுறவுத்துறை அமைச்சர்.
சமாதானத்தை விரும்பும் நாடாக இந்தியாவிற்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்தியா தற்போது சுதந்திரமான பொருளாதார பலம் மிக்க நாடாக பார்க்கப்படுகிறது.
இந்தியா சைபரஸூடன், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, இருநாடுகளுக்கிடையே மக்கள் புலம்பெயர்வதை எளிதாக்கும் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சோலார் ஒத்துழைப்பு என 3 ஒப்பந்தங்கள் மேற்கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இறுதியாக வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் குறித்து சில விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். மோடி அரசங்கம் ஆட்சிக்கு வந்ததும் ஒன்றில் நாங்கள் தெளிவாக இருந்தோம். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், தங்களின் தாய்நாட்டிற்கான முக்கியமான பலம். இதில் இருவேறு கருத்துக்களுக்கு இடம் இல்லை. ஆனால் இதைச் சொல்வது மட்டும் போதாது. உலக அளவில் வேலைவாய்ப்புகள் பெருகிவரும் நிலையில், பல இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இதனால் வெளிநாடுவாழ் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
இன்று, 30,32,33 மில்லியன் இந்தியர்கள். 3.3 கோடி இந்தியர்கள் இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இவ்வளவு அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளில் வாழ்வதால் இந்தியாவுக்கான பலன் பலவழிகளில் வெளிப்படையாக தெரிகிறது. இந்த நேரத்தில் இப்போது இந்தியாவின் கடமை என்ன? என்ற சிக்கல் எழுகிறது.
இந்தியாவின் கடமை வெளிநாட்டில் இருக்கும் நம்நாட்டு மக்களை அனைத்து வழிமுறைகளிலும் பாதுகாப்பது. குறிப்பாக இக்கட்டான சூழ்நிலைகளில் அவர்களுடன் நிற்பதே. கடந்த ஏழு எட்டு வருடங்களில் எப்போதெல்லாம் வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு சிக்கல் எழுந்ததோ அப்போதெல்லாம் இந்திய அரசாங்கம் அவர்களுடன் துணை நின்றதை நீங்கள் அறிவீர்கள்" இவ்வாறு அமைச்சர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT