Published : 25 Dec 2022 06:49 AM
Last Updated : 25 Dec 2022 06:49 AM
ஐ.நா: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக் காலத்தில், இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உறுப்பு நாடுகள் பாராட்டு தெரிவித்தன.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது தனது பதவிக்காலத்தை இந்த மாதத்துடன் நிறைவு செய்தது. இந்த 2 ஆண்டு காலத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா இரண்டு முறை மாதாந்திர தலைமை பொறுப்பையும் ஏற்றது. சுழற்சி முறையில் வரும் இந்த பொறுப்பை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்திலும், இந்த ஆண்டு டிசம்பரிலும் இந்தியா ஏற்றது.
இந்நிலையில் ஆண்டு இறுதி வார விடுமுறைக்கு முன்பாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் கூட்டம் கடந்த வியாழக் கிழமை நடந்தது. அதில் இந்த மாதத்தில் இந்தியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கா்போஜ் எடுத்துரைத்தார்.
சீர்திருத்தம் செய்யப்பட்ட பலதரப்பு விஷயங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து இயக்கம் மற்றும் கடந்த வாரம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, ஐ.நா.வில் மகாத்மா காந்தி மார்பளவு சிலை திறந்து வைத்தது, அமைதிப்படைக்கு எதிரான குற்றங்களை தடுக்க நண்பர்கள் குழுவை தொடங்கியது போன்றவற்றை அவர் சுட்டிக் காட்டினார்.
நன்றி தெரிவித்த கென்யா: இதற்கு ஐ.நா உறுப்பு நாடுகளும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இணையவுள்ள நாடுகளும் பாராட்டு தெரிவித்தன. ஐ.நாவுக்கான கென்யாவின் நிரந்தர பிரதிநிதி மார்டின் கிமனி கூறுகையில், ‘‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களில், இந்தியா மட்டுமே ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு 2 முறை தலைமை தாங்கியதாகவும், இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் சிறந்த பணிகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுடன் இருக்கிறோம்’’ என்றார்.
‘‘இந்த மாதத்தில் மிகவும் மும்முரமாக செயல்பட்டு தனது தலைமையை இந்தியா வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்’’ என நார்வே நாட்டின் நிரந்தர பிரதிநிதி மோனா ஜூல் தெரிவித்தார்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த மாதத்தில் ஏராளமான தீர்மானங்களை நிறைவேற்றிய இந்திய குழுவினருக்கு நன்றி என ரஷ்யா கூறியது. ‘‘ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய தலைமையின் கீழ் இந்த மாதம் மிகவும் பயனுள்ள மாதமாக இருந்தது’’ என அயர்லாந்து தூதர் ஃபெர்கல் மைதன் கூறினார். இதே போல் மெக்சிகோ, மொராக்கோ, வங்கதேசம், ஆஸ்திரியா நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT