Published : 26 Oct 2022 09:33 PM
Last Updated : 26 Oct 2022 09:33 PM

அணு ஆயுத தாக்குதல் அச்சம்: ரஷ்யாவில் ஒத்திகையை ஆய்வு செய்த அதிபர் புதின்

மாஸ்கோ: ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் தடுப்புப் படையின் தயார் நிலை குறித்து அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் ஆய்வு செய்ததாக அந்நாட்டு அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. இதனால், உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடங்கிய தாக்குதல் 9 மாதங்களை கடந்துள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தங்கள் நாட்டுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா பரபரப்பை கிளப்பி உள்ளது. சக்தி குறைந்த அணு ஆயுதங்களை தங்கள் நாட்டிற்கு எதிராக பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அணு ஆயுத பாதுகாப்புப் படையின் தலைவர் இகோர் கிரில்லோ தெரிவித்துள்ளார். அணு ஆயுத தாக்குதலுக்கு உக்ரைன் தயாராவதை அறிந்தால் ரஷ்யா உடனடியாக எதிர்வினை ஆற்றும் என்பதால், அதை வைத்து ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகளைத் திருப்ப அந்நாடு திட்டமிட்டுள்ளதாகவும் இகோர் கிரில்போ குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, இதுகுறித்து ஐ.நா பாதுகாப்பு அவையில் ரஷ்யா முறையிட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கீ ஷொய்கு, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதுகுறித்து கவலை தெரிவித்தார். இந்தியாவுக்கான ரஷ்ய தூதரகம் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உக்ரைனில் மாறி வரும் சூழல் குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கீ ஷொய்கு என்னிடம் விளக்கினார். அணு ஆயுதத்தைப் பயன்படுத்த அந்நாடு திட்டமிட்டிருப்பதாகக் கூறி தனது கவலையை பகிர்ந்து கொண்டார். பேச்சுவார்த்தைக்கான பாதையை ரஷ்யா தேர்வு செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் நிலையை அவரிடம் எடுத்துரைத்தேன். மோதல் ஏற்படுவதற்கு முன்பாக இந்த பேச்சுவார்த்தை வெகு விரைவாக தொடங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன். மனிதத்தன்மைக்கே எதிரானது என்பதால், எந்த தரப்பும் அணுஆயுதத்தை பயன்படுத்தக்கூடாது என்பதையும் குறிப்பிட்டுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் நிலைமை மோசடைந்து வரும் நிலையில், இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே, ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படையின் தயார் நிலை குறித்து அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் இன்று ஆய்வு மேற்கொண்டதாக அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. அணு ஆயுதத்தை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் மற்றம் குறைந்த உயரத்தில் அதிக வேகத்தில் பறந்து விமானப்படை மற்றும் கடற்படை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளின் தயார் நிலை குறித்த ஒத்திகை இன்று நடத்தப்பட்டதாகவும், அதிபர் புடின் இதனை ஆய்வு செய்ததாகவும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் திமிட்ரோ இவானோவிச் குலேபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்று உறுதி அளித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x