Published : 26 Oct 2022 09:26 AM
Last Updated : 26 Oct 2022 09:26 AM

ஃப்ளாஷ்பேக் | கென்யாவிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த ரிஷி குடும்பம்

லண்டன்: ரிஷி சுனக்கின் தாத்தா, பாட்டி ஒருங்கிணைந்த இந்தியாவின் குர்ஜன்வாலாவை (தற்போது பாகிஸ்தான்) சேர்ந்தவர்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1937-ம் ஆண்டில் ரிஷியின் தாத்தா ராம்தாஸ் குடும்பத்துடன் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவுக்கு சென்றார். அங்கு ரிஷியின் தந்தை யாஷ்வீர் பிறந்தார். கடந்த 1960-ம் ஆண்டில் ரிஷியின் குடும்பம் இங்கிலாந்தின் சவுதாம்டன் நகரில் குடியேறியது.

தான்சானியாவில் பிறந்த பஞ்சாபி இந்து குடும்பத்தைச் சேர்ந்த உமாவை, யாஷ்வீர் திருமணம் செய்தார். இவர்களுக்கு ரிஷி சுனக், சஞ்சய் ஆகிய மகன்களும் ராக்கி என்ற மகளும் பிறந்தனர். ரிஷியின் தந்தை யாஷ்வீர் மருத்துவர், தாய் உமா சவுதாம்டனில் மருந்துக் கடை நடத்தி வருகிறார்.

சவுதாம்டன் நகரில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த ரிஷி, இங்கிலாந்தின் வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டின் லிங்கன் கல்லூரியில் இளநிலை படிப்பையும், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் முதுநிலை பட்டத்தையும் பெற்றார். அமெரிக்காவின் கோல்ட்மேன் சாச்ஸ் நிதி நிறுவனத்தில் ரிஷி பணியாற்றினார்.

கடந்த 2015 நாடாளுமன்ற தேர்தலில் ரிச்மாண்ட் தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2017, 2019 பொதுத் தேர்தல்களின்போது அதே தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒவ்வொரு முறை பதவியேற்கும்போதும் பகவத்கீதை மீதே உறுதிமொழி ஏற்கிறார்.

முதல் இந்து பிரதமர்: ரிஷி சுனக்கின் மூதாதையர் இந்து மதம், காத்ரி சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பண்டைய காலம் முதல் காத்ரி சமுதாயத்தினர் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்டோர் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக் இந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவர். சிறு வயது முதல் அவர் சைவ உணவு வகைகளை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். இதுவரை மது அருந்தியது கிடையாது.

வாரம்தோறும் விரதம்: வாரம்தோறும் திங்கள்கிழமை ரிஷி சுனக் விரதம்இருக்கிறார். இந்து மதத்தின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்றி வருகிறார். இங்கிலாந்தின் முதல் இந்து பிரதமர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றுள்ளார்.

200 ஆண்டுகளில் இளம் வயது பிரதமர்: கடந்த 1783-ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரதமராக வில்லியம் பிட் என்பவர் பதவி வகித்தார். அவர் தனது 24-வது வயதில் பிரதமராக பதவியேற்றார். இதன்பிறகு கடந்த 200 ஆண்டுகளில் இளம் வயது பிரதமர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றிருக்கிறார். தற்போது அவருக்கு 42 வயதாகிறது. இதற்கு முன்பு கடந்த 1997-ம் ஆண்டில் டோனி பிளேர் பிரதமராக பதவியேற்றபோது அவருக்கு 43 வயது. இதேபோல கடந்த 2010-ம் ஆண்டில் டேவிட் கேமரூன் 43 வயதில் பிரதமராக பதவியேற்றார். அவர்களைவிட ரிஷி சுனக்குக்கு ஒரு வயது குறைவு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x