Published : 07 Oct 2022 01:47 PM
Last Updated : 07 Oct 2022 01:47 PM

ஈரான் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா

ஜோ பைடன் | கோப்புப் படம்

வாஷிங்டன்: மாஷா அமினி மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் நடத்திவரும் குடிமக்கள் மீது வன்முறையில் ஈடுபட்டு வரும் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.

மாஷா அமினியின் மரணம் காரணமாக, ஈரானில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டத்தைக் கட்டுப்படுத்த பலரை ஈரான் அரசு கைது செய்துள்ளது. 70-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். மேலும், ஈரானில் இணையமும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாஷா அமினியின் மரணத்துக்கும், ஈரானில் போராட்டக்காரர்கள் மீது நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகவும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஏழு உயர்மட்ட தலைவர்களை அமெரிக்கா நியமித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஈரானின் உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர்கள், சட்ட அமலாக்க அமைச்சர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் கூறும்போது, “தங்களது அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடி வரும் ஈரானின் துணிச்சலான குடிமக்கள் மற்றும் துணிச்சலான பெண்களுடன் அமெரிக்கா என்றும் துணை நிற்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பாக, ஈரானின் முக்கியத் தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், தற்போது அமைச்சர்கள் மீது ஈரான் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் முன்னெடுக்க காரணமாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x