Published : 07 Oct 2022 01:17 PM
Last Updated : 07 Oct 2022 01:17 PM

சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கினாலும் அப்புறப்படுத்த மோட்டார் பம்புகள் தயார்: அமைச்சர் கே.என்.நேரு

ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை பார்வையிடும் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: "சென்னையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த இடத்தில் தண்ணீர் தேங்கினாலும் அதனை அப்புறப்படுத்த பம்புகள் தயாராக இருக்கிறது" என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை ராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரூ13.40 கோடி மதிப்பில் ரயில்வே வாகன சுரங்கப் பாதை அமைக்கும் திட்டப் பணியினை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில் 70 முதல் 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 முதல் 5 சதவீதப் பணிகள்தான் முடிக்க வேண்டியுள்ளது. அதனை விரைவில் முடித்துவிடுவோம்.

அதேபோல், எந்த இடத்தில் தண்ணீர் தேங்கினாலும், தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றன. சென்னையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க 741 இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன. இது இந்த ஆண்டு நிலவரம் மட்டும்தான். இன்னும் 3 ஆண்டுகள் கடந்தால், சென்னையில் அனைத்துமே சரியாக இருக்கும்.

அதேபோல், வெட்டப்பட்டுள்ள குழிகளையாவது, மூடிவிடவேண்டும். மக்கள் தெரியாமல் குழிகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குறைந்தபட்சம் தகரங்களை வைத்தாவது மூடிவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்" என்றார்.

மேலும், "இன்று தொடங்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை ரயில்வே சுரங்கப் பாதை பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும். இதன்மூலம், வண்ணாரப்பேட்டை, மண்ணடி, பேசின் பாலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைவார்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x