Published : 27 Sep 2022 05:35 AM
Last Updated : 27 Sep 2022 05:35 AM

ரஷ்ய பள்ளியில் துப்பாக்கிச் சூடு | மாணவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு - சுட்டுக் கொன்ற மர்ம நபர் தற்கொலை

மாஸ்கோ: ரஷ்யாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் 7 மாணவர்கள் உட்பட 13 பேரை சுட்டுக் கொன்ற மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஆயிரம் கி.மீ. தொலைவில் இஸவ்ஸ்க் நகரம் உள்ளது. உட்முர்ஷியா மாகாணத்தின் தலைநகரான இதில் சுமார் 6.3 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்த நகரில் உள்ள ஒரு பள்ளிக் கூடத்தில் நேற்று புகுந்த மர்ம நபர், அங்கிருந்தவர்களை தன்னிடமிருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

இதையடுத்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

போலீஸார் விசாரணை

இதுகுறித்து மாகாண ஆளுநர் அலெக்சாண்டர் பிரச்சலோவ் வீடியோ மூலம் விடுத்த அறிக்கையில், “இஸவ்ஸ்க் நகர பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 7 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 21 பேர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபரும் துப்பாக்கியால் சுட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றார்.

அதிபர் புதின் கண்டனம்

இதனிடையே, இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மனிதத்தன்மையற்ற செயல் என்று தெரிவித்த அதிபர் விளாடிமிர் புதின், இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்ததாக அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்துக்காக 29-ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x