Published : 26 Sep 2022 07:40 PM
Last Updated : 26 Sep 2022 07:40 PM

வங்கதேச படகு விபத்து: பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள், நவராத்திரி காலத்தில் போதேஷ்வரி கோயிலுக்குச் செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. அந்த வகையில், சிறிய படகு ஒன்றில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் போதேஷ்வரி கோயிலுக்குப் புறப்பட்டுள்ளனர். 30 பேர் பயணிக்கக் கூடிய அந்தப் படகில், சுமார் 90 பேர் ஏறியுள்ளனர். இவ்வளவு பேர் ஏறக்கூடாது என்றும், சிலர் இறங்குமாறும் படகு ஓட்டுநர் கூறியதாகவும், ஆனால் யாரும் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிக சுமையுடன் காரடோயா ஆற்றில் படகு பயணித்தபோது திடீரென கனமழை பெய்துள்ளது. இதையடுத்து, போடா என்ற நகருக்கு அருகே படகு திடீரென மூழ்கத் தொடங்கியுள்ளது. படகில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டும் படகு மூழ்குவதை பார்த்தும் அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். மேலும், மீட்புப் படைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

10-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எனினும், ஏராளாமானோர் நீரில் மூழ்கி இறந்துவிட்டனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 60 பேர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக கூறும் அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x