Published : 05 May 2022 07:52 AM
Last Updated : 05 May 2022 07:52 AM
கோபென்ஹேகன்: நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோரை, டென்மார்க் தலைநகர் கோபென்ஹேகன் நகரில் பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இருதரப்பு உறவுகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களில் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஜெர்மனி தலைநகர் பெர்லினிலிருந்து நேற்று முன்தினம் டென்மார்க் சென்றார். அங்கு நடந்த இந்தியா - நார்டிக் (வடக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு அட்லான்டிக் நாடுகள்) 2வது உச்சி மாநாட்டுக்கு இடையே நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோரை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஜோனஸ் கர் ஸ்டோர், பிரதமராக பதவியேற்ற பின், இரு தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
பரஸ்பர நலன்கள்
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா, நார்வே ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருப்பதால், பரஸ்பர நலன்கள் சார்ந்த உலகளாவிய விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்ததாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்பின் டென்மார்க், ஐஸ்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடன் மற்றும் நார்வே பிரதமர்களுடன், 2வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தியா -நார்டிக் உச்சி மாநாடு கடந்த 2018-ம் ஆண்டு நடந்ததில் இருந்து ஏற்பட்டுள்ள ஒத்துழைப்பு பற்றி இந்த தலைவர்கள் ஆய்வு செய்தனர்.
நார்டிக் நாடுகள்
இது குறித்து ட்விட்டரில் பிரதமர் மோடி நேற்று கூறுகையில், “இந்தியா - நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். அதன்பின் நார்டிக் நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அதன்பின் பாரீஸ் சென்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானை சந்தித்து பேசுகிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா - நார்டிக் உச்சி மாநாடு குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் வினய் வத்ரா கூறுகையில், “வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள், டிஜிட்டல் மற்றும் புதுமை கண்டுபிடிப்பு, பசுமை நடவடிக்கை மற்றும் இதர துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார கூட்டுறவுகளில் இந்த உச்சி மாநாடு கவனம் செலுத்துகிறது” என்றார்.
பிரதமர் மோடி கூறுகையில், “இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதில் நார்டிக் நாடுகள் முக்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இந்தப் பயணம் மூலம் நார்டிக் பகுதியில் நமது பல்முனை ஒத்துழைப்பு விரிவடையும்” என்றார்.
கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான நிதியாண்டில் நார்டிக் நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT