Published : 01 Apr 2016 10:24 AM
Last Updated : 01 Apr 2016 10:24 AM

உலக மசாலா: கால்கள் இல்லாமல், 16 வருடங்களாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்!

சீனாவின் சோங்க்விங் மாகாணத்தில் வாடியன் கிராமத்தில் வசிக்கிறார் 37 வயது லி ஜுஹாங். இரண்டு கால்களையும் விபத்தில் இழந்த லி, 16 வருடங்களாக மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். 4 வயதில் ஒரு ட்ரக் கால்களில் ஏறியதில், இரண்டு கால் களையும் இழந்துவிட்டார் லி. உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாகி விட்டது. 4 ஆண்டுகள் அமைதியாக முடங்கிக் கிடந்தவர், 8 வயதில் நகர முயற்சி செய்தார். இரண்டு கைகளுக்கும் இரண்டு நாற்காலி களை வைத்துக்கொண்டு, நகர ஆரம்பித்தார். நகர முடியாதபோது நாற்காலிகளில் அமர்ந்துகொள்வார். பள்ளி செல்ல ஆரம்பித்தவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது. சிறப்பாகப் படித்து, மருத்துவப் பட்டமும் பெற்றார் லி.

தனது கிராமத்திலேயே ஒரு க்ளினிக் ஆரம்பித்து, மருத்துவம் பார்த்து வருகிறார். லியின் குணத்தைப் புரிந்துகொண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த லியு ஸிங்கியான், அவரைத் திருமணம் செய்துகொண்டார். ‘’என் கணவர் எனக்குக் கால்கள் இல்லாத குறையே தெரியாதவாறு கவனித்துக்கொள்கிறார். அருகில் உள்ள கிராமங்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் என்னை அழைத்துக்கொண்டு செல்வார். இதுவரை 6 ஆயிரம் பேருக்கு மருத்துவம் செய்திருக்கிறேன். எனக்குக் கால்கள் இல்லாவிட்டாலும் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்ற முடிகிறது என்ற நிறைவே போதுமானது’’ என்கிறார் லி. கடந்த 15 ஆண்டுகளில் 24 நாற்காலிகளை நடப்பதற்குப் பயன்படுத்தியிருக்கிறார் லி. இவரது 12 வயது மகன், தன் அம்மாவைப் போலவே மருத்துவராக வேண்டும் என்று விரும்புகிறான்.

தன்னம்பிக்கை என்பதை ’லி’ என்றும் அழைக்கலாம்!

மலேசியாவில் உள்ள டெஸ்கோ ஹைபர்மார்க்கெட்டில் ஒருவர் பொருட்களைத் திருடிக்கொண்டிருப்பதை மேனேஜர் பார்த்துவிட்டார். ஆனால் போலீஸை அழைக்காமல், அந்தத் திருடருக்கு அதே கடையில் வேலை கொடுத்தார்! 3 குழந்தைகளுக்குத் தந்தையான ஒருவர், 465 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்களை, பசியால் தவித்த தன் குழந்தைகளுக்காகத் திருடினார். ‘’என் மனைவி கடந்த வாரம் பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்த்தபோது, கோமாவுக்குச் சென்றுவிட்டார். 3 குழந்தைகள், மனைவியைப் பார்த்துக்கொள்வதால் என்னால் வேலைக்கும் போக முடியவில்லை. அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறோம். என் 2 வயது மகன் பசியால் மிகவும் துடித்தான். அதனால்தான் தவறு என்று தெரிந்தும் உணவுப் பொருட்களைத் திருடினேன். மேனேஜர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார்.

ஆனால் என்னைத் திருடன் என்று குற்றம் சாட்டவில்லை. காவல்துறையிலும் புகார் அளிக்கவில்லை. அதற்குப் பதிலாக இந்தக் கடையிலேயே வேலை தருவதாகச் சொல்லிவிட்டார். என் மனைவியும் கோமாவில் இருந்து மீண்டு விட்டார். எனக்கு வேலையும் கிடைத்துவிட்டது. மேனேஜருக்கு எப்படி நன்றி சொல்வேன்’’ என்று நெகிழ்கிறார் அந்த மனிதர். ’’இவர் வழக்கமான திருடரைப் போல இல்லை. என் அனுபவத்தில் இவர் திருடர் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். இக்கட்டான சூழல் என்று தோன்றியது. அதனால்தான் வேலை அளித்தேன்’’ என்கிறார் டெஸ்கோ மேனேஜர் ரட்ஸுவான்.

நல்ல மனம் வாழ்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x