Published : 31 Mar 2016 10:10 AM
Last Updated : 31 Mar 2016 10:10 AM

உலக மசாலா: 100 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இருக்கும் மருத்துவர்!

பாகிஸ்தானில் வசிக்கும் 43 வயது ஜான் முகமது ஒரு மருத்துவர். சொர்க்கத்தில் தனக்கு ஓர் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக 100 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார். “எனக்கு 100 குழந்தைகள் பிறக்க வேண்டும். இஸ்லாம் மதத்தில் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது என் லட்சியம்.

இந்தக் குழந்தைகளின் உதவியால் எனக்கு சொர்க்கத்தில் நிச்சயம் ஓர் இடம் கிடைக்கும். இதுவரை 14 ஆண் குழந்தைகளும் 21 பெண் குழந்தைகளும் பிறந்திருக்கிறார்கள். 2 குழந்தைகள் பிறந்து சில வாரங்களே ஆகியிருக்கின்றன. என் லட்சியத்துக்காக நான் நான்காவது திருமணம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன். குழந்தைகளோடு சேர்த்து மொத்தம் 39 பேரும் 12 அறைகள் கொண்ட ஒரு வீட்டில் வசிக்கிறோம். எனக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. அதனால் குழந்தைகள் கேட்பதை உடனே வாங்கிக் கொடுத்துவிட முடிகிறது.

ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் இடையே நான் வித்தியாசம் எல்லாம் பார்ப்பதில்லை. எல்லா குழந்தைகளையும் நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன். என்னால் 35 குழந்தைகளின் பெயர்களையும் சொல்ல முடியும். ஒவ்வொருவரும் எப்படிப்பட்டவர்கள் என்பது வரை அறிந்து வைத்திருக்கிறேன். நான் க்ளினிக்கில் இருந்து திரும்பும்போது 15 குழந்தைகளாவது ஓடி வந்து என்னைக் கட்டிக்கொள்வார்கள். அந்த சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. ஓய்வு நேரங்களில் குழந்தைகளோடு விளையாடுவேன். இந்த வாழ்க்கை வாழ நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்’’ என்கிறார் ஜான் முகம்மது.

ஒரு மருத்துவர் இப்படிச் செய்யலாமா?

சீனாவின் ஷாங்காய் நகரில் இருக்கும் ஒரு நிறுவனம், அலுவலகத்துக்கு செல்லப் பிராணிகளை அழைத்து வர ஊழியர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஸாவோ கோங்சோங் கூறும்போது, “ஊழியர்களை உற்சாகப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பெரும்பாலான ஊழியர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பது தெரிய வந்தது. அவர்களிடம் விவாதித்தேன். எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ஆனாலும் இது சரியா என்று எனக்குள் சின்ன சந்தேகம் இருந்தது. செல்லப் பிராணிகளை அனுமதித்த பிறகு, கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் அளவுக்கு அதிகமான உற்சாகத்தில் இருக்கிறார்கள். வேலையின் தரமும் உயர்ந்திருக்கிறது.

என் முயற்சி வெற்றி பெற்றதில் திருப்தியாக இருக்கிறேன். நாய்கள், பூனைகள், கினியா பன்றிகள் என்று எங்கள் அலுவலகமே களைகட்டுகிறது” என்றார். “வீட்டில் என் பூனை என்ன செய்கிறதோ என்ற டென்ஷன் இப்போது இல்லை. வேலை தொடர்பான மன அழுத்தம் காணாமல் போய்விட்டது. அலுவலகம் வருவது இப்பொழுதெல்லாம் அலுப்பூட்டும் விஷயமாக இல்லை. எல்லா நாட்களும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் ஓர் ஊழியர். ஸாவோவின் யோசனையை மற்ற நிறுவனங்களும் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இனி செல்லப் பிராணிகளும் அலுவலகம் கிளம்ப வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x