Published : 19 Mar 2016 10:26 AM
Last Updated : 19 Mar 2016 10:26 AM

உலக மசாலா: பறவைகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பவர்!

டென்மார்க்கைச் சேர்ந்த கலைஞர் தாமஸ் டாம்போ. தன்னுடைய சிற்பக் கலையை, உலகம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு உதவி செய்வதில் பயன்படுத்தி வருகிறார். மனிதர்கள் மற்ற உயிரினங்களுடன் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காகவே ஆயிரக்கணக்கான பறவை வீடுகளை அமைத்து வருகிறார். உலகம் முழுவதும் 7 ஆண்டுகளில் 3,500 வீடுகளை அமைத்திருக்கிறார்! ‘’பறவைகளும் குறைவான விலங்குகளும் நம் நகரங்களில் தற்போது வசித்து வருகின்றன. அதனால்தான் பறவை வீடுகள் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தேன்.

வீடுகள், விளக்குக் கம்பங்கள், மரங்கள், சுவர்கள் என்று கிடைக்கும் இடங்களில் எல்லாம் பல வண்ண மர வீடுகளை அமைத்து வருகிறேன். பழங்களைச் சாப்பிடும் பறவைகள், நகர் முழுவதும் எச்சங்களைப் போடுகின்றன. அதிலிருந்து வரும் விதைகளால் புதிய மரங்கள், செடிகள் தானாக வளரும் வாய்ப்பு உருவாகிறது. இந்தப் பறவை வீடுகளால் பரபரப்பான நகரத்தில் பறவைகள் பாதுகாப்பாக உணர்கின்றன. மறுசுழற்சி என்பதை மக்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் விகிதம் குறையும். பூமிக்கும் நல்லது. அதனால் ஒரு பயிற்சிப் பட்டறை உருவாக்குவதுதான் என் அடுத்த இலக்கு’’ என்கிறார் தாமஸ் டேம்போ. பெரும்பாலான பறவை வீடுகளை ஆந்தை, கிளிகளைப் போலவே உருவாக்கி வைத்திருக்கிறார்! ஒரே ஒரு பறவை வீட்டைத் தனக்காகப் பெரிய அளவில் உருவாக்கி வைத்திருக்கிறார் தாமஸ்.

பறவைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் தாமஸ் வாழ்க!

ஆஸ்திரேலியாவின் பில்பாராவில் உள்ள விட்டென்நூம் அழகான பகுதி, அதே நேரத்தில் மிக ஆபத்தான பகுதியும்கூட. 80 ஆண்டுகளுக்கு முன்பு நீலக் கல்நார் இங்கே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வெட்டி எடுப்பதற்காகச் சுரங்கம் அமைக்கப்பட்டது. கல்நார் அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது. கல்நாரின் மெல்லிய இழைநார்களை வெட்டி எடுக்கும்போது ஏராளமான தூசிகள் காற்றில் கலக்கின்றன. நாளடைவில் குணமாக்க முடியாத புற்றுநோயைத் தோற்றுவித்து விடுகின்றன. 20 ஆயிரம் மக்கள் சுரங்கத்துக்கு அருகில் வாழ்ந்தார்கள். அதில் 2 ஆயிரம் பேர் கல்நார் பாதிப்பு நோய்களால் மரணமடைந்துவிட்டனர். 1966-ம் ஆண்டு இந்தச் சுரங்கம் மூடப்பட்டது.

இதற்குக் காரணம் மனிதர்கள் மீது உள்ள அக்கறை அல்ல. வருமானம் குறைந்துவிட்டதால்தான் மூடப்பட்டது. 1978-ம் ஆண்டு அங்கு வசித்த மக்களை வேறு இடங்களுக்குச் செல்ல அரசாங்கம் ஊக்குவித்தது. ஆனால் சிலர் வெளியேற விருப்பம் இன்றி, அங்கேயே வசித்து வந்தனர். 2006-ம் ஆண்டு வரைபடத்தில் இருந்து இந்தப் பகுதி நீக்கப்பட்டது. ஆபத்துகளை விளக்கி இந்தப் பகுதிகளில் எச்சரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனாலும் இங்கே இன்னும் 3 மனிதர்கள் வசித்து வருகின்றனர்!

ஆபத்து.. உள்ளே வராதே...



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x