Last Updated : 08 Dec, 2015 04:14 PM

 

Published : 08 Dec 2015 04:14 PM
Last Updated : 08 Dec 2015 04:14 PM

கொடூர கொலைகளும் முறையான நிர்வாகமும்: அம்பலமான ஐஎஸ் அமைப்பின் செயல்முறைகள்

அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி ஐஎஸ் அமைப்பை பைத்தியம் பிடித்த கொடூர அமைப்பு என்றும், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே காட்டுமிராண்டிகள் என்றும், பிரிட்டன் பிரதமர் கொலையை வழிபாடு செய்யும் அமைப்பு என்றும் வர்ணித்துள்ளனர். ஆனால் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு இவற்றையெல்லாம் தாண்டியது என்பதே தற்போது வெளிவந்துள்ள செய்தியாகும்.

இது குறித்து 'தி கார்டியன்' ஊடகத்துக்கு கிடைத்துள்ள ஆவணங்களின் படி, ஐஎஸ் அமைப்பில் ஆட்சி அதிகாரிகள், சிவில் ஊழியர்கள் ஆகியோர் உள்ளனர் என்றும் இவர்களே மீன்பிடி தொழில் முதல் ஆடை ஒழுங்கு முறைகள் வரை அனைத்தையும் பற்றி விதிமுறைகளை அங்கு வகுத்து வருகின்றனர். கள்ள நோட்டுகளை கையாளும் முறை முதல் பல்கலைக் கழகங்கள் அனுமதி வரை ஒரு முறையான அரசாங்கமாகவே ஐஎஸ் செயல்பட்டு வருவது இந்த ஆவணங்களின் மூலம் வெளியாகியுள்ளது.

தி கார்டியன் ஊடகத்துக்கு இதுதொடர்பாக, 340 அதிகாரபூர்வ ஐஎஸ் ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதன் படி, சாலைகள் முதல் நர்சரிகள் வரை ஹோட்டல்கள் முதல் சந்தைகள் வரை எப்படி செயல்பட வேண்டும் என்ற விதிமுறைகளும் அரசாணைகளும் என்று அரசுக் கட்டுமானங்களில் ஐஎஸ் ஈடுபட்டு வருகிறது. அனைத்தையும் ஒருசேர வைத்துப் பார்க்கும் போது ஐஎஸ் தீவிரவாதிகளின் உத்தேசமான அரசாங்கம் பற்றிய விரிவான ஒரு சித்திரம் கிடைத்துள்ளது என்கிறது கார்டியன்.

ஜூன் 2014-ல் வெளியான தீர்மானங்களின் படி உடை மற்றும் நடத்தை விதிமுறைகள் முதலில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தொடக்கம் முதல் அரசு கட்டமைப்பு முதல் வேலைவாய்ப்பு வரை அனைத்து விதமான உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் கொண்ட ஆவணங்களை ஐஎஸ் வெளியிட்டுள்ளது.

சமூக சேவை போன்ற துறை ஒன்றை உருவாக்கி அதில் வேலைவாய்ப்பு விளம்பரங்களையும் ஐஎஸ் வெளியிட்டுள்ளது.

கல்வியைப் பொறுத்தமட்டில், பள்ளிகளின் நாட்கள் விவரம், கிண்டர் கார்டன் பள்ளிகளை தொடங்குவது மற்றும் ஆசிரியர்கள் தேர்வு குறித்த ஆவணங்களும் இதில் அடங்குகிறது.

மேலும் பல ஆவணங்கள் பாதுகாப்பு, ராணுவம் தொடர்பான விஷயங்களாகும். உலக நாடுகள் தங்களுக்கு எதிராக ஒன்று கூடிய நிலையில் ஐஎஸ் தீவிரவாதம் மேலும் பீதிநிலைக்கு ஆளாகியுள்ளது. தனிப்பட்ட வை-ஃபை நெட்வொர்க்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கம், தாமிரம், இரும்பு கடத்தலைத் தடுக்க சோதனை மையங்களை வைப்பதற்கான அறிவிப்புகளும் இந்த ஆவணங்களில் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படியாக, ஐஎஸ் வளர்ச்சியில் ஒரு காலவரிசை உள்ளது. ஆனால் இந்த காலவரிசையில் பலதரப்பட்ட விஷயங்களும் ஊடுருவியுள்ளன. முன்பு 2 தனி நாடுகளாக இருந்ததை ஒன்று சேர்க்க ஐஎஸ் திட்டங்களை தீட்டி வருகிறது. இதனை நோக்கிய முன்னெடுப்பாக ஐஎஸ் இயூப்ரேட்ஸ் மாகாணத்தை உருவாக்கியுள்ளது. இரு நாட்டு சர்வதேச எல்லையில் உருவாக்கப்பட்ட புதிய மாவட்டத்தின் மூலம் கடும் கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகிறது ஐஎஸ்.

ஐஎஸ்-ன் ஒரு முக்கியப் பிரச்சினை என்னவெனில் சிரியா, மற்றும் இராக் உயர்கல்வி முறைகளில் இருக்கும் வேறுபாடு காரணமாக 3-வது முக்கியத்துவம் வாய்ந்த கல்வி அமைப்பின் மூலம் ஒருங்கிணைக்க முடியாமல் ஐஎஸ் திணறி வருகிறது. அதே போல் சிரியா பவுண்டுகள், இராக்கின் தினார்கள், கள்ள அமெரிக்க டாலர்களும் ஐஎஸ் புழக்கத்தில் உள்ளது. இதுவும் ஐஎஸ் எதிர்கொண்டு வரும் ஒரு பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

பொருளாதார விவகாரங்களை பொறுத்தவரை வாடகை வசூல், விலைக்கட்டுப்பாடுகள் ஆகியவற்றை ஐஎஸ் செயல்படுத்தி வருகிறது. சோவியத் பாணி பொருளாதாரக் கட்டுப்பாடுகளை ஐஎஸ் விதிக்கவில்லை. அங்கு தனிச்சொத்துகள் அனுமதிக்கப்படுகின்றன, தனியார் வர்த்தகம் அனுமதிக்கப்படுகிறது. சாலைகள் கட்டுமானம் போன்ற அரசுசார்ந்த திட்டங்களிலும் தனியார் ஈடுபட அனுமதித்துள்ளது.

இந்த ஆவணங்களில் மிக முக்கியமானது ஐஎஸ் எப்படி வருவாய் ஈட்டுகிறது என்பது பற்றியதாகும். தெர் எஸ்-ஸார் மாகாணத்துக்குரிய ஒரு 6 பக்க மாதாந்தர நிதி அறிக்கையில் 8.4 மில்லியன் டாலர்கள் வருவாய் காண்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தீவிரவாத அமைப்புக்கு அதிகமானது, ஆனால் ஒரு அரசாகச்செயல்பட இது போதாது.

ஐஎஸ் வருவாயில் 23.7% வரிவருவாய் ஆதிக்கம் செலுத்துகிறது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் 27.7% பங்களிப்பு செய்கிறது. இந்த விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் நாளொன்றுக்கு 66,400 டாலர்கள் வருவாய் கிட்டி வருகிறது.

இதுதவிர சிலரது சொத்துகளை முடக்குவதன் மூலமும் வருவாய் பெறுகிறது. சட்டவிரோதமான சிகரெட் கடத்தல்காரர்களுக்கு அபராதம், எலெக்ட்ரானிக் பொருட்கள் கடத்தலுக்கு அபராதம், மேலும் ‘ஐஎஸ் விரோதிகள்’ என்று முத்திரைக் குத்தப்படுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல் ஆகியவையும் அதன் வருவாய் பட்டியலில் பிரதான இடம் பிடித்துள்ளது. இந்த நடைமுறைகள் அதன் வருவாயில் 45% பங்களிப்பு செய்து வருகிறது.

இந்த ஒட்டுமொத்த வருவாயில் 63.5% தொகை இயக்க போர்வீரர்கள் சம்பளம் மற்றும் ராணுவ முகாம்களை பரமாரித்தல் ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது. 17.7% தொகைதான் மக்களுக்காக செலவிடப்படுகிறது.

ஊழல் எதிர்ப்புக்கான புகார் தெரிவிக்கும் அலுவலகமும் வைத்துள்ளது ஐஎஸ். மதம் தொடர்பான கல்வியில் திறமையை வெளிப்படுத்துபவர்களுக்கு 100 டாலர் பரிசுத் தொகை அளிப்பது இப்படியாக ஐஎஸ் அமைப்பின் உள்ளாட்சி ஓரளவுக்குக் கொடிகட்டிப் பறப்பதை கூட்டணி படைகளின் வான்வழி குண்டு வீச்சுத் தாக்குதலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே எதார்த்த நிலவரம் என்கிறது தி கார்டியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x