Published : 17 Nov 2020 11:27 AM
Last Updated : 17 Nov 2020 11:27 AM

அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கரோனாவால் பாதிப்பு

அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ அமைப்பு கூறும்போது, “அமெரிக்காவில் கரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து இதுவரை சுமார் 10,39,464 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருந்துவக் குழுவினருக்கு நம்பிக்கை வழங்கி இருக்கிறது.

அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும், தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.

லண்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக முயற்சியில் கண்டுபிடிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளது. மேலும் கரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனை முடிவு பயனுள்ளதாக வந்துள்ளது என்று அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x